×

ஸ்மார்ட் சிட்டி 84 பணிகளில் 62 பணிகள் நிறைவு நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு ஓய்வறைகள்

*மேயர் பி.எம். சரவணன், கமிஷனர் சிவ.கிருஷ்ணமூர்த்தி பேட்டி

நெல்லை : நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் தங்கி செல்வதற்கு ஓய்வறைகள் அமைக்கப்படும் என மேயர் பி.எம். சரவணன், கமிஷனர் சிவ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது குறித்து மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பஸ் நிலையத்தில் கடைகளுக்கு முன்பு முகப்பு பெஞ்சுகளில் பொருட்கள் வைத்திருப்பதை அகற்ற உத்தரவிட்டனர். வடை, சம்சா உள்ளிட்ட பலகாரங்கள் மூடப்படாமல் திறந்த வெளியில் விற்பனை செய்வதை தடை செய்ய அறிவுறுத்தினர்.

டீ கடைகள், பேப்பர் கப்களில் டீ வழங்கக் கூடாது, பிளாஸ்டிக் கப்புகள் வைத்திருக்கக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டனர். மாநகராட்சியின் கட்டண கழிப்பிடங்களுக்கு சென்ற மேயர் மற்றும் கமிஷனர் மற்றும் அதிகாரிகள், கழிப்பறையை முறையாக பராமரிக்கவும், உரிய கட்டணங்களை வசூலிக்கவும் கேட்டுக்கொண்டனர். பின்னர் பஸ்நிலையத்தின் மேல்தளம் சென்று ஏலம் போகாத கடைகள், அரங்குகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

அதன்பின்னர் மேயர் பி.எம். சரவணன் மற்றும் கமிஷனர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சுற்றுப்புற சுகாதாரம் பேணவும், தரமான பொருட்களை விற்கவும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டோம். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என கடைக்காரர்களை கேட்டு கொண்டோம். இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் பஸ்நிலைய வளாகங்களில் படுத்திருப்பதை காண முடிகிறது.

எனவே பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு மேல்தளத்தில் அவர்கள் தங்குவதற்கு ஓய்வறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தோடு இங்கு வருவோர் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காட்டி ஓய்வெடுத்துக் கொள்ள வசதிகள் செய்யப்படும். மேல்தளத்தில் காலியாக உள்ள ஹால்களில் அகடமி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை மாநகர பகுதிகளில் 160 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. இதில் 97 மாடுகள் அந்தந்த உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மட்டுமே மாடுகள் ஏலம் விட்டதன் மூலம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கிடைத்துள்ளது. மாடுகளை ஏலமிடுவதால் 60 சதவீத கால்நடைகள் தெருவில் திரிவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பழைய பேட்டையில் சரக்கு முனைய பணிகளும், வணிக வளாக பணிகளும் முடிவடைந்துவிட்டன. அங்குள்ள குளிர்பதன கிடங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 20 நாட்களுக்குள் அப்பணிகளும் முடிவடையும். அதன்பின்னர் விவசாயிகள், வியாபாரிகள் அந்த குளிர் பதன கிடங்கை பயன்படுத்திக்கொள்ளலாம். நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 84 பணிகளில் 62 பணிகள் முடிந்து விட்டன. 22 பணிகள் மட்டும் நடந்து வருகிறது.

மாநகராட்சி சுவர்களில் அனுமதியின்றி ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்றிவிட்டு, அங்கு அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களை செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆய்வின் போது மேலப்பாளைம் மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாட்சா, சுகாதார அலுவலர் அரசகுமார், கவுன்சிலர் நித்திய பாலையா, முன்னாள் கவுன்சிலர் பாலன் என்ற ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Smart City ,Nellie New Bus Stand , Nellai: Rest rooms will be set up for passengers to stay at Nellai new bus station, Mayor P.M. Saravanan, Commissioner Siva.
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...