சென்னை: விளையாட்டு துறையில் தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சங்கரய்யா வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், குரோம்பேட்டை பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான என்.சங்கரய்யா வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, என்.சங்கரய்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், விளையாட்டு துறையில் தமிழகத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுங்கள். இந்தியாவின் சார்பில் தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பதக்கங்களை வெல்லும் வகையில் பயிற்சி அளியுங்கள். நீங்கள் நிர்வகிக்கும் அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துக்கள் என தெரிவித்தார். இந்த, சந்திப்பின்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
