×

ரூ.7 கோடி வரி செலுத்தக்கோரி தாஜ்மகாலுக்கு ஆக்ரா நகராட்சி நோட்டீஸ்

ஆக்ரா: வரலாற்றில் முதல் முறையாக தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு சொத்து வரி, தண்ணீர் வரியாக ரூ.7 கோடி வரை செலுத்தக் கோரி தொல்லியல் துறைக்கு ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால், ஆக்ரா கோட்டை மற்றும் இத்மத்-உல்-தவுலாவின் கல்லறை மாளிகை போன்ற சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.
 
இவை தேசிய நினைவு சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், தாஜ்மகாலுக்கு தண்ணீர் வரியாக ரூ.1.94 கோடியும், சொத்து வரியாக ரூ.1.47 லட்சமும், இத்மத்-உல்-தவுலாவின் கல்லறைக்கு சொத்து வரியாக ரூ.1.4 லட்சமும் செலுத்தக் கோரி ஆக்ரா நகராட்சி நிர்வாகம் தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுமட்டுமின்றி, ஆக்ரா கோட்டைக்கு ரூ.5 கோடி சேவை வரி செலுத்தக் கோரி ஆக்ரா கன்டோன்மென்ட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

15 நாட்களுக்குள் பணத்தை செலுத்தாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரி ராஜ்குமார் படேல் கூறுகையில், ‘‘நாட்டில் உள்ள 4000 நினைவுச் சின்னங்களை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதுவரை இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது கிடையாது.

ஏனெனில் தேசிய நினைவுச்சின்னங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு உள்ளது. ஜிஎஸ்டி விதியிலும் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது’’ என்றார். வரலாற்றில் முதல் முறையாக தேசிய நினைவுச்சின்னங்களுக்கு சொத்து, தண்ணீர் வரி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் தொல்லியல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Agra ,Taj Mahal , Agra Municipality notices to Taj Mahal for payment of Rs 7 crore tax
× RELATED ஆக்ராவின் சுவாரஸ்ய சுயேச்சை; 100வது தேர்தலை நோக்கி ஹனுஸ்ராம் அம்பேத்காரி