×

ஒவ்வொரு குடிமகனுக்கும் காப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: காப்பீடு திட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, கே.கே.நகரை சேர்ந்த டாக்டர் கார்த்திக், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஏழை. எளிய மக்களின் நலனுக்காக அரசு தரப்பில் மருத்துவ காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு, தனியார் மருத்துவமனைகளில் முறையாக சிகிச்சை வழங்குவதில்லை. இதனால் பல கோடிகளை செலவிட்டும் திட்டத்தின் நோக்கம் முறையாக நிறைவேறாமல் போகிறது. எனவே, அரசின் காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கவேண்டும் என்றும், வழிகாட்டுதல்களை பின்பற்றாத மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் குறித்து பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தி, தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் தகுதியான ஒவ்வொரு குடிமகனுக்கும் எளிய முறையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கேற்ற வகையில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Tags : To ensure that every citizen has access to insurance: iCourt Branch Order
× RELATED வேலூர் தொரப்பாடியில் தந்தை பெரியார்...