×

பாணாவரம் அருகே ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மாணவர்கள்: ‘சுரங்கப்பாதை இருந்தும் பலனில்லை’

பாணாவரம்: பாணாவரம் அருகே சுரங்கப்பாதை இருந்தும் பயனில்லாததால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை தொடர்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளது. இப்பகுதிக்கு கன்னிகாபுரம், மேட்டுக்குன்னத்தூர், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தினசரி வந்து செல்கின்றனர். குறிப்பாக காட்டுப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் கன்னிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் காட்டுப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனை கருத்தில்கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ரயில்வே சுரங்கப்பாதை  அமைக்கப்பட்டது. ஆனால் சிறிய அளவில் மழை பெய்தாலும் கூட சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கிவிடுகிறது. இந்த தண்ணீர் வடிய சில நாட்கள் ஆகிறது.

மேலும் தொடர் மழை பெய்தால் நீண்ட நாட்களுக்கு சுரங்கப்பாதை வழியாக செல்லமுடியாமல் மக்கள் அச்சப்படுகின்றனர். சுரங்கப்பாதை ஒட்டிய பகுதியில் விஷப்பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. இருசக்கர வாகனத்திலும் செல்ல முடியவில்லை. இதனால் பெரும்பாலான மக்கள் சுரங்கப்பாதை வழியாக செல்வதை தவிர்த்துவிட்டு தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

குறிப்பாக சைக்கிளில் செல்லும் மாணவர்கள் அதனை கடக்கும்போது பல நேரங்களில் தடுமாறுகின்றனர். இதனால் பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே மழைக்காலத்தின்போது சுரங்கப்பாதை இருந்தும் பயன் இல்லாமல் இருப்பதால் உடனுக்குடன் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  அச்சமின்றி சுரங்கப்பாதை வழியாக அனைவரும் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Panavaram , Students dangerously crossing railway tracks near Panavaram: 'Underpass is no use'
× RELATED பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மலைக்கு...