×

செங்கை அரசு மருத்துவமனையில் பழுதடைந்த லிப்ட்டை சரிசெய்யாததால் நோயாளிகள், ஊழியர்கள் கடும் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பழுதடைந்த லிப்ட்டை சரி செய்யாததால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நோயின் தீவிரம் கருதி சிலர், உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். விபத்துகளில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், முதியவர்கள் போன்றவர்களால் படிக்கட்டு வழியாக நடந்து செல்ல முடியாது. பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் லிப்ட் வசதி இருந்தும் அவை பழுதடைந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 2 முறை பழுதானது. இதில் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 10க்கும் மேற்பட்டோர் பழுதான லிப்டில் சிக்கி தவித்தனர். அவர்களில் சிலருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. அந்த லிப்ட்டை இதுவரை சரிசெய்யவில்லை. அதனால் மருத்துவமனை ஊழியரகள், ஒப்பந்த துப்புரவு பெண் பணியாளர்கள் படிக்கட்டு வழியாக சென்று வருகின்றனர். நோயாளிகளை ஸ்டெச்சர் மூலம் சாய்தள படிக்கட்டு வழியாக வார்டுகளுக்கு அழைத்து செல்லும் அவலநிலை உள்ளது.

இதனால் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களது உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என பலரும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கூறுகையில், ‘இந்த மருத்துவமனைக்கு தினமும் புறநோயாளிகள், உள்நோயாளிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்குள்ள லிப்ட் பழுதடைந்துள்ளது. சீரமைக்கப்படாமல் உள்ளதால் கடும் அவதிப்படுகிறோம். லிப்டை புதுப்பித்து மக்கள் பயண்பாட்டிற்கு குறிப்பாக நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி  சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Chengai Government Hospital , Patients and staff are suffering due to non-repair of faulty lift at Chengai Government Hospital
× RELATED செங்கை அரசு மருத்துவமனையில் மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரலாம்