×

திருச்சி முகாம் சிறையில் கைதான 9 பேருக்கும் பாகிஸ்தான், இலங்கை போதை பொருள் கும்பலுடன் தொடர்பு

திருச்சி: கேரள மாநிலம் கொச்சி என்ஐஏ எஸ்பி தர்மராஜ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு நேற்று திருச்சி சிறப்பு முகாம் சிறைக்கு சென்று மாலை வரை விசாரணை நடத்தினர். பின்னர், அங்கிருந்த இலங்கையை சேர்ந்த குணசேகரன் (எ) குணா, புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணா, முகமது அஸ்மின், அலக பெருமக சுனில் காமினி பான்சி (எ) நீலகண்டன், ஸ்டான்லி கென்னடி பெர்னான்டஸ், தனுகா ரோஷன், லடியா, வெல்லா சுரங்கா, திலீபன் ஆகிய 9 பேரை கைது செய்து தனி வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்றிரவு சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இவர்களில் சென்னையில் குணசேகரன் (எ) குணா சென்னையிலும், சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் முகமது அஸ்மின், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நீலகண்டன், சென்னை போரூர் அம்பத்தூரில் ஸ்டான்லி கென்னடி பெர்னான்டஸ் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் 9 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க உள்ளனர்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்தாண்டு மார்ச் மாதம் கேரளாவின் அரபிக்கடலில் விழிஞ்சம் துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கடத்தி சென்ற இலங்கை படகு சிக்கியது. அந்த படகில் சோதனையிட்டபோது பல கோடி மதிப்புள்ள 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 ரக துப்பாக்கி, 1,000 எண்ணிக்கையில் 9 எம்.எம் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த நந்தனா, தாசப்பிரியா, குணசேகரா, செனாரத், ரணசிங்கா, நிசாங்கா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கடத்தல் கும்பலில் தொடர்புடையவர்களிடம் அவ்வப்போது திருச்சி முகாம் சிறையில் இருந்து செல்போன் மூலமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதன் அடிப்படையில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மற்றும் பாகிஸ்தான் போதைப்பொருள் மாபியா கும்பலுடன் 9 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களில் குணசேகரன், பூக்குட்டி கண்ணா ஆகியோர் மிக முக்கியமானவர்கள் என்றனர்.

Tags : Trichy Camp Jails ,Pakistan , 9 people arrested in Trichy Camp Jail have links with Pakistani and Sri Lankan drug gangs
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்