இந்திய பெண்கள் முதலாளிகளாக இருக்கும்: ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களில் ரூ.622 கோடி முதலீடு: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தகவல்

புதுடெல்லி: இந்திய பெண்கள் நடத்தும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களில் கூகுள் நிறுவனம் ரூ.622 கோடி முதலீடு செய்யும் என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார். இந்தியா வந்துள்ள தமிழகத்தை சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுந்தர் பிச்சை, நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள வலைப்பதிவில், ‘இந்தியாவின் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களில் கூகுள் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும்.

இந்த  நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் டாலரில், நான்கில் ஒரு பங்கு  பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். அதாவது 75 மில்லியன் டாலர் (ரூ.622 கோடி)  முதலீடு செய்யப்படும். கல்வி, திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும். உலகின் முக்கிய ஏற்றுமதி பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்.

செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு, வார்த்தைகள் மற்றும் குரல் ஒலி மூலம் 100க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளை மொழிப்பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகில் அதிகம் பேசப்படும் 1,000 மொழிகளை ஆன்லைன் தளத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். சென்னை ஐ.ஐ.டி - கூகுள் நிறுவனம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் ஒரு பில்லியனுக்கும் இந்திய மக்கள் பயனடைய முடியும்’ என்றார்.

Related Stories: