நந்தனம் டி பார்ம் கல்லூரியில் நாளை மறுதினம் நடைபெறும் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்காததை கண்டித்து மாணவர்கள், பெற்றோருடன் தர்ணா போராட்டம்-திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் நந்தனம் டிபார்ம் கல்லூரியில் நாளை மறுதினம் நடைபெறும் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்காததை கண்டித்து மாணவர்கள் பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டியில் நந்தனம் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஏற்கனவே பல்வேறு மாணவர்களுக்கு படித்து முடித்த சான்றிதழ் வழங்கப்படவில்லையாம். அதேபோல் பாலிடெக்னிக் உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு 10ம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்று உள்ளிட்டவைகள் வழங்கப்படவில்லை. இதற்காக பல போராட்டங்களை மாணவர்கள் நடத்தியும் கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் நந்தனம் டி பார்ம் கல்லூரி தொடங்கப்பட்டு முதலாம் ஆண்டில் 57 மாணவ, மாணவிகள் டி.பார்ம் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த ஒரு ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை முழுமையாக கட்டி படித்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை மறுதினம் வேலூர்  அரசு மருத்துவ கல்லூரியில் இந்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு தேர்வு நடக்க உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை கடந்த 10 நாட்களாக மாணவர்கள் கேட்டு வருகின்றனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் விரைவில் தருவதாக தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நாளை மறுநாள் (22ம் தேதி) தேர்வு நடக்கும் நிலையில் இதுவரை ஹால் டிக்கெட் வரவில்லை என்று மாணவ, மாணவிகள்  நேற்று கல்லூரி முதல்வர் முத்துகுமாரிடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணம் ₹75 ஆயிரத்தை முழுமையாக கட்டினால் மட்டுமே ஹால் டிக்கெட் கொடுக்கப்படும் என திடீரென தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்திடம் திடீரென நாளை மறுதினம் நடைபெறும் தேர்வின்போது இரண்டாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை செலுத்தினால்தான் ஹால் டிக்கெட் கொடுக்கப்படும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

தற்போது எங்களுடைய பெற்றோர்கள் அனைவரும் மிகவும் கஷ்டமான சூழலில் இருந்து வருகின்றனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் பணத்தை கட்டினால் மட்டுமே ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று கல்லூரி முன் திரண்டு கல்லூரி முதல்வரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: