×

அருப்புக்கோட்டை அருகே பன்றி, மான்களால் மக்காச்சோளம் பாழ்-சாத்தூரில் போதிய மழை இல்லாமல் கருகுது...

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே, காட்டுப்பன்றிகள், மான்கள் மக்காசோளப் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சாத்தூர் பகுதியிலோ போதிய மழை இல்லாமல், மக்காச்சோள பயிர் கருகி வருகிறது.அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி, வேலாயுதபுரம், செட்டிபட்டி, சேதுராஜபுரம், சிதம்பராபுரம், போடம்பட்டி, வதுவார்பட்டி, ராமலிங்கபுரம், செட்டிக்குறிச்சி, வாழ்வாங்கி, பெரியநாயகபுரம், வெள்ளையாபுரம், மலைப்பட்டி, ஆமணக்குநத்தம், குருந்தமடம் ஆகிய ஊர்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, கம்பு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மக்காச்சோள பயிர்கள் நன்கு விளைந்துள்ள நிலையில், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள், மான்கள், கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை தின்று சாகுபடியை பாழாக்கி வருகின்றன. இரவு நேரத்தில் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு விதைத்தல், களை எடுத்தல் என அறுவடை வரை ரூ.22 ஆயிரம் செலவாகிறது என்கின்றனர். கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கடனை கட்டமுடியுமா என கவலையில் உள்ளனர். கம்பளிப்புழு, அமெரிக்காப்புழு, பன்றிகள், மான்கள் தொல்லை ஆண்டுதோறும் மக்காச்சோள சாகுபடிக்கு தொடர்ந்து சோதனை வருகின்றன என்கின்றனர்.

இது குறித்து மாவட்ட கவுன்சிலர் செட்டிபட்டி பாலசந்தர் கூறுகையில், ‘அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பன்றிகள், மான்கள் பயிரை பாழாக்கி வருகின்றன. பயிர்களை சுற்றி வேலி அமைத்தும் பயனில்லை. வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைந்தால் பயிர்க்காப்பீடு கிடையாது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

சாத்தூரில் மழை இல்லாததால் கருகும் பயிர்: சாத்தூர் பகுதியில் உள்ள என்.மேட்டுப்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், குமரெட்டியார்புரம்,அம்மாபட்டி, இராமலிங்காபுரம் இருக்கன்குடி, நென்மேனி, மேட்டமலை ஆகிய பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். விதைத்த காலங்களில் வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்ததால், மக்காச்சோள பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்தது. அதன்பின் போதிய மழை இல்லாததால், உரம் வைக்க முடியவில்லை. இதனால், பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



Tags : Aruppukkottai ,Chattur , Aruppukkottai: Farmers worried as wild boars, deer destroy maize crops near Aruppukkottai
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு:...