×

கடமலை - மயிலை ஒன்றியத்தில் மாற்று விவசாயம் தேடும் தென்னை விவசாயிகள்

*வாடல் நோய் தாக்குதலுக்கு தீர்வு காண வேண்டும்

*கொள்முதல் விலை நிர்ணயிப்பது அவசியம்

வருசநாடு : கடமலை - மயிலை ஒன்றியத்தில் தென்னை மரங்களில் வாடல் நோய் தாக்குதல் மற்றும் கொள்முதல் விலை குறைந்ததன் காரணமாக தென்னை விவசாயிகள் பலரும் மாற்று விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். நோய் தாக்குதலுக்கு தீர்வு காண்பதுடன், தேங்காய் கொள்முதல் விலையை அரசுதரப்பில் நிர்ணயிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

கடமலை - மயிலை ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் நிலங்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாடல் நோய், கூண்வண்டு தாக்குதல் உள்ளிட்டவை தென்னை விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னை விவசாய பரப்பை அதிகப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடமலை - மயிலை ஒன்றியத்தில் இயற்கையிலே தண்ணீர் வசதி அதிகம் உள்ளது. இந்நிலையில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, சிங்கராஜபுரம், வருசநாடு, தும்மக்குண்டு, குமணன்தொழு, மூலக்கடை உள்ளிட்ட ஊர்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கு பார்த்தாலும் தென்னை விவசாயம் அதிகளவில் காணப்பட்டது.

ஆனால் தற்போது இப்பகுதியில் மக்கள் தொகை பெருக்கத்தினால் வீடுகளின் தேவை அதிகரித்துள்ளது. இதற்காக தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டு பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை விவசாயத்தில் கேரளாவில் இருந்து பரவிய வாடல்நோய் மற்றும் கூண்வண்டு தாக்குதல் மற்றும் தேங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போனது உள்ளிட்ட காரணங்கால் தென்னை விவசாயம் பாதிக்குமேல் குறைந்துவிட்டது.

இதற்கிடையே தென்னை மரங்களை அதிகம் தாக்கியுள்ள வாடல் நோயை முழுமையாக அகற்ற கடமலைக்குண்டு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்தறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் வாடல் நோயால் பாதிக்கப்பட்டு வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கான திட்டங்களால் இதுவரை எந்த பலனும் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் கடமலை - மயிலை ஒன்றியத்தில் தென்னை விவசாயத்தின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த விவசாயத்தை அழித்து வாழை, இலவமரம், எலுமிச்சை, கொட்டை முந்திரி உள்ளிட்ட விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். எனவே தென்னை விவசாயத்திற்கு புத்துயிர் ஊட்ட தேவையான திட்டங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடமலை - மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை , குமணந்தொழு, மூலக்கடை, முத்தாலம்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் தேங்காய்கள் காங்கேயம், திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை மட்டுமல்லாமல் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை - மயிலை ஒன்றியத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது.

அதன் காரணமாக தற்போது ஒன்றியத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக தேங்காய் கொள்முதல் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.சில நாட்களுக்கு முன்பு வரை 15 ரூபாய்க்கு விற்பனையான தேங்காய் தற்போது 11 முதல் 12 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. விலை குறைவுக்கு உற்பத்தி அதிகரிப்பு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி போதுமான விலை கிடைக்காத நேரங்களில் விவசாயிகள் பலரும் தேங்காய்களை வெயிலில் உலர்த்தி அதன் கொப்பரைகளை எடுத்து எண்ணெய் தயாரிப்பிற்காக ஏற்றுமதி செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொப்பரை தேங்காயின் கொள்முதல் விலையும் குறைந்துள்ளது. அத்துடன் தேங்காய்களை வெட்டி கொப்பரைகளை எடுத்து உலர்த்தும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான ஊதியம் கொடுக்க முடியாத வகையில் அவற்றின் கொள்முதல் விலை நிலவரம் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் கடமலை - மயிலை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்து காணப்படுகிறது. இதன்படி கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தேங்காய் விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தேங்காய்க்கு நிலையான கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானிய விலையில் உரம், பூச்சிக்கொல்லி

இந்த பிரச்னைகள் குறித்து விவசாயிகள் கூறுகையில், தென்னையை நட்டு வளர்த்தால் பல ஆண்டுகளுக்கு அதிகமான மகசூல் தொடர்ச்சியாக கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் நட்டுவைத்த மரங்கள் வாடல் நோய் தாக்குதல் காரணமாக பட்டுப்போனதால் அவற்றை வெட்டி அகற்றும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே மாற்று விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தென்னை விவசாயத்தின் பரப்பை அதிகரிக்கவும், வாடல் நோய் தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், தென்னை மரங்களுக்கு மானிய அடிப்படையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவற்றை அரசு தரப்பில் வழங்க வேண்டும் அவ்வாறு வழங்கினால் மட்டுமே தென்னை விவசாய பரப்பளவு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றனர்.

Tags : Kamalai - Manilai Union , Varusanadu: Coconut farmers in Kadamalai-Mylai Union due to blight attack on coconut trees and reduced procurement price.
× RELATED கடமலை- மயிலை ஒன்றியத்தில் தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்குமா?