×

கடமலை - மயிலை ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத மலை கிராமங்கள்-பொதுமக்கள் அவதி

வருசநாடு : கடமலை - மயிலை ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் ஆறு மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் அன்றாடம் தவித்து வருகின்றனர்.
கடமலை - மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்டதாக காந்திகிராமம், முத்துநகர், அண்ணாநகர், தண்டியகுளம், கோடாலிஊத்து, ஐந்தரைபுலி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மானாவாரி விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

மேலும் இங்கு கால்நடை வளர்ப்பு, கூலி வேலை செய்வது மக்களின் அன்றாட வேலையாக உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ேடோர் வாழ்கிறார்கள். இந்த கிராமங்களில் சாலை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்டவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இங்கு வசிப்போர் நீண்ட காலமாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல வாலிப்பாறை, தும்மக்குண்டு, வருசநாடு போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் சுமார் 7 கி.மீ தூரம் நடந்து செல்லும் அவல நிலை தொடர்கிறது. இந்த பகுதிக்க அரசு டவுன்பஸ் வசதி இல்லாததால் மழை காலங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் வீடு திரும்பும்போது இரவு 7 மணி வரை ஆகி விடுகிறது. இப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இதுபோல் இரவு நேரங்களில் வீடு திரும்பும் மாணவர்கள் ெபரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் பலரும் தங்கள் கல்வியை தொடராமல் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகி வருகிறது.

பஸ்வசதி இல்லாதது போலவே, இப்பகுதியில் சாலை வசதியும் முறையாக செய்து தரப்படவில்லை. இதனால் இந்த மலை கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் நடந்துகூட செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அந்த அளவிற்கு இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைப்பதுடன், அரசு தரப்பில் டவுன் பஸ்கை இயக்க வேண்டும் என்ற மலைக்கிராம மக்கள் கோரியுள்ளனர்.

இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், ஒவ்வொரு நாளும் எங்களது வாழ்க்கை சவால் நிறைந்ததா உள்ளது. முதியவர்கள் மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு தோளில் சுமந்து செல்லும் அவலநிலை தொடர்கிறது.

ஒவ்வொரு நாளும் குடும்பத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை வெளியே சென்று வாங்கி வருவது மிகவும் சவாலாகவே உள்ளது. இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாத மலை கிராமங்களில் உடனடியாக மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Kadamalai - Mountain ,Mayilai Union , Varusanadu: People living in six hilly villages in Kadamalai-Mylai union are suffering daily.
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் களைகட்டும்...