×

பல்லடம் வட்டாரத்தில் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகள்-கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பல்லடம் : பல்லடத்தில் உள்ள மாவட்ட (தெற்கு) மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் அமைப்புகளுடனான கலந்தாய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (திருப்பூர் தெற்கு) சார்பில் பல்லடத்தில் நுகர்வோர் அமைப்புகளுடனான கலந்தாய்வு கூட்டம் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமையில் நடைபெற்றது. அதில் நுகர்வோர் அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் மணிக்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது. பல்லடம் தாலலுகாவில் மாதப்பூர் ஊராட்சியில் இயங்கி வரும் கார்பன் தொட்டிக்கரி தயாரிக்கும் தொழிற்சாலை வி.கள்ளிப்பாளையம் ஊராட்சி துத்தாரிபாளையத்தில் இயங்கி வரும் இரும்பு உருக்காலை உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை, சுற்றுச்சூழல் விவசாய நிலங்களுக்கு பாதிப்பும், சீர்கேடும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுக்கள் உடல் ஊனம் ஏற்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுகிறது. எனவே மேற்படி இடங்களில் உள்ள இரும்பு கார்பன் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து மக்கள் நல்வாழ்வுக்கும் சுற்றுச்சூழல் விவசாய நிலங்கள் பாதுகாக்கவும் உறுதி செய்து விதிமீறும் முறைகேடு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லடம் தாலூக்கா 63.வேலம்பாளையம் ஊராட்சி பல்லடத்திலிருந்து 63.வேலம்பாளையம் செல்லும் வழியில் நடுவேலம்பாளையம் பிரிவில் தனியார் தார் பிளான்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதற்கு மிக அருகில் வி.ஆர்.பி.நகர் மற்றும் அதைச் சுற்றிலும் தோட்டத்து பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனியார்  தார் பிளான்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயன கரும்புகை மாசுத்துகள் மற்றும் தார் துர்நாற்றம் அதிகமாக வருவதால் மூச்சுத்திணறல் நுரையீரல் புற்றுநோய் மூளை பாதிப்பு சம்மந்தமான பிரச்சனைகள் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

 இது குழந்தைகள் நல்வாழ்வுக்கு பாதகமான சூழல் இங்கு குடியிருக்க முடியாத அவலநிலை உருவாகியுள்ளது. எனவே மேற்படி பகுதியில் இயங்கி வரும் தனியார் தார் பிளான்ட் தொழிற்சாலை மீது கள ஆய்வு செய்து உரிம அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.பல்லடம் நகராட்சி  பச்சாபாளையம்  8வது வார்டில்  மயான பகுதியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  நவீன எரியூட்டு மயானம் அமைக்க பல்லடம் நகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது. அவ்விடத்தில்  நீரோடை உள்ளது. அப்பகுதியில்  ரேசன் கடை, தனியார் பள்ளி உள்ளது.  அப்பகுதியில்  எரியூட்டு மயானம் அமைந்தால் அதன் நச்சுப்புகையால்  அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு உடல், மனப் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

 எனவே அப்பகுதியில் எரியூட்டு மயானம் அமைக்க வேண்டாம். சம்பந்தப்பட்ட துறையினர் கள ஆய்வு செய்து எரியூட்டு மயானத்துக்கு எவ்வித அனுமதியும்  (NOC) வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதிபாளையத்தில் இருந்து திருச்சி சாலை செல்லும் சாலையில் மகிழ்வனம் பூங்கா அருகில் தனியார் தொழிற்சாலை புதிதாக அமைத்து வருவதாகவும் அதனால்  எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்பட கூடும்.

மேலும் அது அரசு புறம்போக்கு நிலம்  நீர் நிலை குட்டையை ஆக்கிரமித்து  தொழிற்சாலை கட்டிடம் கட்டப்படுவதாகவும்  அப்பகுதி பொது மக்கள்  புகார் அளித்துள்ளனர். அந்த தொழிற்சாலைக்கு எவ்வித அனுமதியும் வழங்க கூடாது. கரைப்புதூர் ஊராட்சியில்  பாச்சாங்காட்டுப்பாளையம் மற்றும் சில இடங்களில்  உள்ள சாய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன நச்சுகலந்த சாயக்கழிவு நீர்,  நீர் நிலைகளில் கலந்து, விவசாய நிலங்களை, சுற்றுச்சூழல் இயற்கை வளங்களை பாழ்படுத்தி வருகிறது.  

இதனால் அப்பகுதி மக்கள் குழந்தைகள் மற்றும் கால்நடைகள் பல்வேறு நோய் தொற்று ஏற்பட்டு  பெரும் பாதிப்புக்கு உள்ளாகி  வருவதாக தொடர் புகார்கள் வருகிறது. எனவே மேற்படி பகுதிகளில் உடனே கள ஆய்வு செய்து முறைகேடாக இயங்கிவரும் சாய ஆலைகள் மீது உரிய  நடவடிக்கை எடுத்து அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags : Palladam , Palladam : A consultation meeting with consumer organizations was held at the District (South) Pollution Control Board office in Palladam on Monday.
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...