×

திருப்பத்தூரில் போலி வாரிசு சான்று மூலம் சொத்தை அபகரித்த தாய், தங்கை மீது நடவடிக்கை கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பத்தூர் : போலி வாரிசு சான்று மூலம் சொத்தை அபகரித்த தாய், தங்கையின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு  4 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அதிமுக கிளை செயலாளர் லியோ பிரான்சிஸ் சேவியர்(60). இவர் கடந்த கொரோனா நோய் தொற்று காலத்தில் உயிரிழந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஆலிஸ் அக்சிலியா. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் சிவராஜ் பேட்டை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் வீரமணிகண்டன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனது தந்தை இறந்த பிறகு வாரிசு உரிமை சான்று பெற்றனர். அதில் தாய் கேத்தரின் ஜார்ஜுனா, மகள்கள் ஆலிஸ் ஆக்சிலியா, இவாஞ்சலின் ரோஷினி ஆகியோருக்கு வாரிசுதாரர்களாக வட்டாட்சியர் மூலம் சான்று வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது தாய் கேத்தரின் ஜார்ஜூனா மற்றும் தங்கை இவாஞ்சலின் ரோஷினி ஆகிய இருவரும் போலியாக வாரிசு உரிமை சான்று தயாரித்து அதில் இரண்டு பேர் மட்டுமே வாரிசு என்று ஐந்து ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்துள்ளனர்.

இதனையறிந்து அதிர்ச்சியடைந்த ஆலிஸ் அக்சிலியா போலியான ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையம் மற்றும் மாவட்ட பத்திரப்பதிவு துறை அதிகாரி பிரகாஷ் இடம் மனு அளித்தார். அந்த மனு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று விசாரணை செய்யப்பட்டு மீண்டும் 29ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் பலமுறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதுடன் மோசடி செய்தவர்களை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி, கைக்குழந்தையுடன்  சென்று மாவட்ட பதிவாளரை கண்டித்து நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் 4 மாத பெண் குழந்தையுடன் ஆலிஸ் அக்சிலியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவரிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டார்.இதனால் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Thirupattur ,Tharna , Tirupattur: 4 months before the collector's office urging action against the mother and younger sister who seized the property through fake inheritance certificate.
× RELATED டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி: திருப்பத்தூர் அருகே சோகம்