பெரம்பூர் அரசுப் பள்ளியில் கிக் பாக்சிங்கில் சாதனை படைத்த மாணவிகள்: இந்தோனேசியாவில் நடந்த போட்டியில் தங்கம் வென்று அசத்தல்..!!

சென்னை: சாதனைகள் புரிய வறுமை ஒரு பொருட்டே அல்ல என நிரூபித்திருக்கிறது மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பூர் அரசுப் பெண்கள் மேல்நிலை பள்ளி இப்பள்ளியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிகள் ரேவதி, நிவாகுமாரி,வகுப்பு மாணவி தமிழ் ஆகியோர் இந்தோனேசியாவில் நடந்த உலக முயாய் தாய் கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை குவித்துள்ளனர். பதகங்களோடு நாடு திரும்பிய மூவருக்கும் சகமாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க கைதட்டி ஆராவாரமாக வரவேற்றனர்.

இதில் மாணவி தமிழ் செல்போனிலும், தொலைக்காட்சியிலும் பார்த்தே கிக் பாக்சிங் வீரராக உருவெடுத்துள்ளார். கூலிவேலை செய்பவரின் மகளான தமிழுக்கு கிக் பாக்ஸிங் மீது  இருந்த கனவை நிறைவேற்றியுள்ளது, பெரம்பூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

பள்ளியில் இலவசமாக நடத்தப்பட்ட கிக் பாக்சிங் முகாமில் இணைந்து பல கட்ட பயிற்சிகளை பெற்ற மாணவி தமிழ் மாநிலம் மற்றும் சர்வதேச அளவில் பல வெற்றிகளை குவித்துள்ளார். ஒலிம்பிக்யில் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு என்கிறார் தமிழ்.

அதே போல மாணவி நிவாகுமாரி முடிதிருத்தும் தொழிலாளியான மகளாவார் பள்ளியில் நடந்த இலவச கேம்பில் மாணவிகள் பயிற்சி பெறுவதை பார்த்தே நிவாகுமாரிக்கும் கிக் பாக்ஸிங் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கிக் பாக்சிங்கியில் இருந்தால் அடிகள் விழும், ரத்தம் வரும் எதற்கு இந்த வேலை என்ற அச்சுறுத்தல்கள், அறிவுரைகள் எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு சர்வதேச அளவில் சாதித்து காட்டிருக்கிறார், ஆட்டோ ஓட்டுனரின் மகளான ரேவதி தன்னை போல ஏழ்மைநிலைமையில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சியளித்து கிக் பாக்சிங்கியில் சாதனைப் புரிய வைக்கவேண்டும் என்பதே கனவு என்கிறார் மாணவி ரேவதி.

கிக் பாக்சிங்கியில் சாதிக்க ஏழ்மை ஒரு தடையே கிடையாது என நம்பிக்கையூட்டும் பயிற்சியாளர் உமாமகேஸ்வரி திறமையும் விருப்பமும் இருந்தால் போதும் என்கிறார். அதற்கு மாணவிகள் ரேவதி, தமிழ், நிவாகுமாரியே நல்ல உதாரணம் என்கிறார் அவர் மாணவிகளுக்கு பயிற்சி கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர்களின் ஏழ்மைநிலையை உணர்ந்து போட்டிகளுக்கு தயாராகவும்,சென்று வரவும் தேவையான நிதிஉதவியை தாராளமனம் கொண்டவர்களிடம் பெற்றுக்கொடுத்தும் முன்னுதாரணமாக திகழ்கிறது பெரம்பூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

பயிற்சி கொடுக்கவும்,ஊக்கப்படுத்தவும் சரியான தளமும் நபர்களும் இருந்தால் அரசு பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு பெரம்பூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியே சான்று. மாணவிகளின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பாராட்டுகள் குவிகின்றன. 

Related Stories: