×

மாண்டஸ் புயலால் விதித்த தடை நீங்கியது அலையாத்திகாடு செல்ல மீண்டும் அனுமதி

*சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

முத்துப்பேட்டை :மாண்டஸ் புயலால் விதித்திருந்த தடை நீங்கியதை அடுத்து அலையாத்திகாடு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும்.

இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் பரவி காணப்படுகிறது.

காவிரி ஆற்று படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலையாத்திகாடு நீண்டுள்ளது.
இந்த அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூர பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும். ஆற்றின் இருபுறமும் அடர்ந்து, படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்

. உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகு காண்போரை பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்கு செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று காட்டுக்குள் சென்றுவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு ஒற்றுமொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொக்க பூமியாக இங்கு காணமுடியும்.


அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக கடந்த 9ம்தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை இந்த முத்துப்பேட்டை அலையாத்திக் காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை செய்து வனத்துறை அறிவித்து இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதை தவிர்த்தனர்.

இந்நிலையில் சகஜமான நிலை வந்ததையடுத்து நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் வழக்கம்போல் சுற்றுலா செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த தகவல் தெரிந்த முதல்நாளே உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

இதனால் அலையாத்திகாட்டிற்கு அழைத்து செல்லும் வனத்துறையின் படகுகள் கிடக்கும் ஜாம்புவானோடை படகு துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் படகுகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி உள்ளே அழைத்து செல்வதும் திரும்ப கொண்டு வருவதுமாக களைக்கட்டி காணப்பட்டது.

Tags : Mandus , Mandous Cyclone, Muthupettai, Alaiyathi Forest, Forest Department
× RELATED தமிழகத்தில் பரவலாக மழை: காஞ்சிபுரம்,...