விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சிக்கலை சந்திக்க நேரிடும்: ஒன்றிய அரசுக்கு பாரதிய கிசான் சங்கம் எச்சரிக்கை

புதுடெல்லி: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஒன்றிய அரசு பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும் என்று பாரதிய கிசான் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த பாரதிய கிசான் சங்கம் சார்பில் ‘விவசாயிகள் கர்ஜனை’ என்ற பெயரில் பேரணி நடைபெற்றது. இதில் பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக இவர்கள் டெல்லியை வந்தடைந்து பேரணியில் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து பாரதிய கிசான் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் செவிசாய்க்காவிட்டால் மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் சிக்கலை சந்திக்க நேரிடும். மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும். இடுபொருட்களுக்கான செலவு மற்றும் பணவீக்கம் காரணமாக விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. விவசாய இயந்திரங்கள் மற்றும் உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கம் செய்ய வேண்டும்.பால் பண்ணைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கக்கூடாது. விவசாயிகளின் பிரச்னைகளில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்குள் விவசாயிகள் கோரிக்கைகளை  அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: