பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியையும் குற்றவாளியாக்கி தண்டனை வழங்க வேண்டும்: கோகுல்ராஜின் தாய் சித்ரா பேட்டி

ஓமலூர்: கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியையும் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்க வேண்டும் என கோகுல்ராஜின் தாய் சித்ரா தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015ல் ஆணவ கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10பேரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில், இறந்த கோகுல்ராஜின் தாய் கூறுகையில், ‘ஏழு ஆண்டுகளாக நடந்த எனது மகன் கொலை வழக்கில், இந்த ஆண்டு தான் தீர்ப்பு கிடைத்தது. இது எங்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், எனது மகனை துடிதுடிக்க கொலை செய்து வீசிய அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.  எனது மகனை கொலைகாரர்கள் கடத்தி சென்று கொலை செய்துள்ளனர். அப்போது, கூடவே இருந்த சுவாதி, கொலையை மறைக்கும் வகையில் பிறழ் சாட்சியாக மாறியுள்ளார். எனவே, எனது மகனின் கொலையில், சுவாதிக்கும் தொடர்பு இருப்பதாகவே எங்களுக்கு தோன்றுகிறது. அதனால், அவரையும் குற்றவாளியாக சேர்த்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் உண்மையை மறைத்து, பிறழ் சாட்சியாக மாறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்,’ என்றார்.

Related Stories: