×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 250 கன அடியாக குறைப்பு

பல்லாவரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்தது. இதனால், கடந்த வாரங்களில் ஏரியில் இருந்து, 3000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்வது நின்று, நன்றாக வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளதால், ஏரிக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால், கடந்த வாரத்திலிருந்து ஏரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 750 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், நன்றாக வெயில் அடித்ததுடன், மழை பொழிவது முழுமையாக நின்று, தற்போது கடுங்குளிர் நிலவி வருவதால், ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது.‌ நேற்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் உபரிநீர் 657 கன அடியாகவும், ஏரியில் மொத்தம் உள்ள 24 அடி உயரத்தில் தற்போது, 22.02 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

மேலும், கோடை கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு நேற்று பிற்பகல் 12 மணி முதல் 750 கன அடியிலிருந்து, தற்போது 250 கன அடியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் ஏரிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் தடைப்படும் பட்சத்தில், ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் முழுமையாக நிறுத்தப்படும் என்று ஏரியை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Chembarambakkam , Reduction of excess water release from Chembarambakkam lake to 250 cubic feet
× RELATED துண்டு துண்டாக வெட்டி காவலாளி கொலை;...