திருவொற்றியூர்: சென்னை பெருநகர வளர்ச்சி கருத்து கேட்பு கூட்டத்தில், திருவொற்றியூரில் இருந்து மாதவரம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை பெருநகர பகுதிக்கான 3ம் முழுமை திட்டம் 2027-2046ம் ஆண்டிற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்காகவும், மக்கள் தொகை, பொருளாதார வசதி, வீட்டு வசதி, போக்குவரத்து நகர்ப்புற வசதிகள், சுற்றுப்புற சூழல், உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு மேம்பாடுகள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், திருவொற்றியூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, கவுன்சிலர்கள், கவிகணேசன், ஜெயராமன், கே.கார்த்திக், திரவியம், சிவகுமார், சுசிலாராஜா, பானுமதிசந்தர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
இதில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு பொது சுகாதார மையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்ட வேண்டும். விம்கோ ரயில் நிலையத்திலிருந்து மாதவரம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். பொதுமக்கள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட அதிகாரி மூர்த்தி, மாநகராட்சி உதவி ஆணையர் சங்கரன் மற்றும் அதிகாரிகள் குறிப்பெடுத்தனர்.