×

கொடநாடு எஸ்டேட் வழக்கு தற்கொலை செய்த ஊழியர் வீட்டில் சிபிசிஐடி விசாரணை

கோத்தகிரி: கொடநாடு கொலை வழக்கு சம்மந்தமாக கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொடநாட்டில் உள்ள ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் 320 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.  சிபிசிஐடி சிறப்பு விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில், 3 டிஎஸ்பிகளின் மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கோத்தகிரி அருகே கெங்கரை கிராமத்துக்கு இவர்கள் சென்றனர். அங்கு கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி தற்கொலை செய்த தினேஷின் தந்தை போஜன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை  நடத்தினர். தினேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து கேட்டு தகவல்களை சேகரித்தனர். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணை குறித்தும் கேட்டறிந்தனர். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார், 720 தொலைபேசி உரையாடல் பதிவுகள் குறித்து தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Koda Nadu ,CBCID , Koda Nadu estate case CBCID investigation at employee's house who committed suicide
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...