×

டிக்... டிக்... ரபேல் வாட்ச்... பக்... பக்... பல லட்சம் விலை: அண்ணாமலையின் ரபேல் ரகசியம்

சென்னை: ரஃபேல் போர் விமானங்களை தயாரித்த நிறுவனம்தான், அதே  போர் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு ரஃபேல் கைக் கடிகாரங்களை தயாரித்துள்ளது. அதில் ஒரு வாட்ச்சைத்தான் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கட்டி தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு நேரடியாக அவர் விளக்கம் அளிக்காததால் பரபரப்பும், வாட்ச் குறித்த மர்மமும் எழுந்துள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வித்தியாசமான வாட்ச் குறித்த பல்வேறு விதமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த கடிகாரத்தின் விலை குறித்தும், நேர்மையான ஒரு எஸ்பியாக பணியாற்றிய அண்ணாமலை எப்படி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் கட்டினார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இதற்கு அண்ணாமலை நேரடியாக பதில் அளிக்கவில்லை.

தன்னுடைய சொத்து விவரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார். இதனால் வாட்ச் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. இதனால் இந்தச் வாட்ச் குறித்து விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. அதோடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரான்சிடம் இருந்து ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக குற்றச்சாட்டுக்களை கூறியது.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் அதே விமானத்தை கூடுதலாக வாங்கியது. இதுவும் சர்ச்சையானது. இவ்வாறு சர்ச்சைக்குள்ளான விமான நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட ரபேல் வாட்ச்சை அண்ணாமலை வாங்கி கட்டியது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. ரபேல் கடிகாரம் ஏன்: போர் விமானங்களை தயாரிக்க ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆனதை பொன் விழாவாக   2013ம் ஆண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் கொண்டாடியது.

அதன்  நினைவாக ‘பெல் அண்டு ராஸ்’ என்ற பிரான்ஸ் கடிகார நிறுவனத்துடன் இணைந்து 500  கடிகாரங்களை தயாரிக்க  டஸ்ஸால்ட் நிறுவனம் முடிவு செய்தது. அதற்காக ரபேல்  விமானம் செய்வதற்கான மூலப் பொருட்களை மட்டும் பயன்படுத்தவும் தீர்மானித்தது.

‘பெல் அண்டு ராஸ் பிஆர் 03-94 ரஃபேல்’ என்று  பெயரிடப்பட்ட இந்த கடிகாரம் சதுர வடிவில் 4.2செமீ நீள, அகலத்தில் கருப்பு நிறத்தில்  தயாரிக்கப்பட்டது. இந்திய அரேபிய எண்கள் அச்சிடப்பட்ட சாம்பல் நிற டயல்  உள்ளே பொருத்தப்பட்டுள்ளது. அதில்  ரஃபேல் விமானத்தின் படமும்  அச்சிடப்படப்பட்டு உள்ளன. கூடவே பெல் அண்டு ராஸ் என்ற கடிகார நிறுவனத்தின்  பெயர் மேலேயும்,    ரஃபேல் பிஆர் 03-94 லிட் என்ற விமான நிறுவனத்தின் பெயர்  கீழேயும் பொறிக்கப்பட்டுள்ளன. இது கருப்பு மற்றும் சாம்பல் நிற ‘கேஸ்’களில் பொறுத்தப்பட்டுள்ளது. ரஃபேல் விமானங்களை பயன்படுத்தும் நாடுகள்: பிரெஞ்ச்  விமான, விண்வெளிப் படை, பிரெஞ்ச் கப்பல் படை, எகிப்து விமானப் படை, கத்தார் எமிரி விமானப் படை மற்றும் இந்திய விமானப் படை.
விலை: பொன் விழா ஆண்டின் நினைவாக உற்பத்தி செய்யப்பட்ட 500 கடிகாரங்களும்  வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்கப்படவில்லை. அவை பெல் அண்டு ராஸ் கடிகார நிறுவனம் மூலமாகதான் விற்பனை செய்யப்பட்டதாம். விற்பனைக்கு வந்த 2013-2015 ஆண்டுகளில் 6,200 அமெரிக்க டாலர் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டதாம். 2015ல் ஒரு டாலரின் இந்திய மதிப்பு 62.97 ரூபாயாகும்.  அதனால் அப்போதைய இந்திய மதிப்பு  3 லட்சத்து 90 ஆயிரம்.

வரிகள்: வரிகள் எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை.  கூடவே இந்தியாவில் இறக்குமதி வரி உண்டு. அதனால் ரஃபேல் கடிகாரத்தின் அப்போதைய இந்திய மதிப்பு குறைந்தது 5 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறார்கள். இப்போதையே நிலவரப்படி இறக்குமதி கடிகாரங்களுக்கு 10சதவீதம் சுங்க வரியும்(கஸ்டம்ஸ் டாக்ஸ்), 18சதவீதம் சிஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக இப்போது ஒரு கைக் கடிகாரத்தின் விலை 5 லட்ச ரூபாய் என்றால்,  சுங்க வரியுமாக 50 ஆயிரம் ரூபாயும், ஜிஎஸ்டியாக 90 ஆயிரம் ரூபாயும் சேர்த்து செலுத்த வேண்டும். சில நேரங்களில் கடிகாரத்தின் விலையை பொருத்து மட்டுமல்ல அதில் பயன்படுத்தப்பட்டு உள்ள பொருட்களின் மதிப்பையும் கணக்கீடு செய்வார்கள். சில நிறுவனங்கள் நேரடியாக இறக்குமதி செய்து வரி உட்பட என்று விலை நிர்ணயித்தும் விற்கிறார்கள்.

கடிகார கம்பெனியின் கதை: ரபேல் விமான நிறுவனத்துடன் இ ணைந்து கடிகாரத்தை தயார் செய் பெல் அண்டு ராஸ் நிறுவனம் 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கியவர்கள் புருனோ பெலாமிக்(பெல்) மற்றும்  கார்லோஸ் ராஸில்லோ(ராஸ்). இவர்கள் இருவரும் மாணவர்களாக இருந்த போது ஆய்வு திட்டப் பணிக்காக ஜெர்மனி கடிகார நிறுவனத்துடன் இணைந்து புதிய கைக் கடிகாரத்தை உருவாக்கினர்.  ஆசிரியர்களின் பாராட்டையும், மதிப்பெண்ணையும்  அள்ளித் தரவே அதையே  தங்கள் தொழிலாக மாற்றிக் கொண்டனர். கூடவே தங்கள் பெயர்களை சுருக்கி  நிறுவனத்துக்கும் பெயரும் வைத்து விட்டனர்.

கடிகாரத்தில் என்ன ஸ்பெஷல்
* ரபேல் விமானத்தில் பயன்படுத்தப்படும் செரமிக்(பீங்கான்)  எஃகு பொருட்களை கொண்டு கடிகாரத்தின் ‘கேஸ்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த செரமிக் எஃகு பொருட்கள்தான் ஜெட் விமானங்களில், ராக்கெட்களில்  வெப்பம்  தாக்குப்பிடிக்கும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கூடவே ரஃபேல் விமானத்தின் மூக்குகள் (முன் உள்ள கூர் முனைகள்) இந்த செரமிக்கினால்தான் செய்யப்பட்டுள்ளன. ரஃபேல் போர் விமானத்தில் உள்ள விமானிகள் அறை (காக்பிட்) போன்ற தோற்றத்தில், நிறத்தில் இந்த கடிகாரத்தின் தோற்றம் இருக்கும்.
* அதிநவீன தானியங்கி கடிகாரம்
* எந்த வகை தட்ப வெப்ப நிலையிலும் இந்த கடிகாரம் தடையின்றி செயல்படும்.
* செரமிக் எஃகு போன்ற உறுதியான கடினத்தன்மையுள்ள  பொருட்களை பயன்படுத்தினாலும் இது வழக்கமான கடிகாரங்களை விட பல மடங்கு எடை குறைவானது.
* கடிகாரத்தின் மேல் கண்ணாடி ‘சபையர்’ வகையை சேர்ந்தது. எதிரொளி பிரதிலிப்புகளினால் நேரம் பார்ப்பதில் உள்ள சிரமங்களை தவிர்க்கும் வகையில்  இந்த கண்ணாடி மீது சிறப்பு பூச்சு செய்யப்பட்டுள்ளது. இந்த வகை கண்ணாடிதான் விமான அறையில் முன் பக்கம் பொருத்தப்பட்டு இருக்கும்.
* மணி, நிமிடம், விநாடிகளை  காட்ட தனித்தனி முட்கள் இருக்கின்றன. தேதியும் காட்டும்

ரபேல் நடால் கட்டியிருப்பது ரபேல் கடிகாரமா?: பல  மாதங்களுக்கு அதாவது 2022 கொரோனா காலத்தில் அத்துடன் பிரபலமானது டென்னிஸ்  நட்சத்திரம் நடால் (ஸ்பெயின்) கட்டியிருக்கும் கைக் கடிகாரம். ஆனால் அது பிரான்ஸ்  நாட்டின் ரஃபேல் கடிகாரமல்ல. அது சுவிட்சர்லாந்து நாட்டின்  ரிச்சர்டு மல்லே நிறுவனத்திடம்  ‘ஆர்டர்’ கொடுத்து வாங்கிய கடிகாரம். பார்க்க பெரிதாக தெரிந்தாலும் எடை மிகவும் குறைவு. வெறும் 30கிராம்தான்.  தண்ணீரில் விழுந்தால்  மிதக்கும். இந்த வகை கடிகாரங்கள் மொத்தமே 50 தான்  தயாரிக்கப்பட்டன. நடால்  வாங்கிய போது 10லட்சத்து 50ஆயிரம் அமெரிக்க  டாலர்கள். அப்போது இந்திய மதிப்பு வெறும் 7.69 கோடி ரூபாய்தான்.

Tags : Rafael ,Anamalai , Tick...tick...Raphael watch... p...p... multi-lakh price: Annamalai's Raphael secret
× RELATED பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி