சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா பொருட்காட்சி நடத்துவது தொடர்பான டெண்டரை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் 2023ம் ஆண்டுக்கான 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழிலக பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை கடந்த அக்டோபர் 31ம் தேதி சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த ஃபன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், டெண்டர் கோரி தங்களது  நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. டெண்டர் திறக்கப்பட்ட போது, தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றி விட்டு டெண்டரை இறுதி செய்துள்ளனர்.

எனவே, இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். தங்கள் டெண்டர் படிவத்தையும் பரிசீலிக்குமாறு சுற்றுலா துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டிசம்பர் 19ம் தேதி வரை டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2017ம் ஆண்டு நடந்த பொருட்காட்சியின் போது அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை 3 லட்சம் ரூபாயை செலுத்தாததால் மனுதாரரின் டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், டெண்டர் நிராகரிக்கப்பட்டது குறித்து தங்கள் தரப்புக்கு தகவல் தெரிவிக்கவில்லை. டெண்டரில் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை. டெண்டரை நிராகரிக்க, டெண்டர் பரிசீலனைக் குழுவுக்கு அதிகாரமில்லை என்று வாதிடப்பட்டது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு பாக்கித் தொகை வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது என்று டெண்டர் நிபந்தனைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: