திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் இருந்து திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் மத்தூர் அம்மன் கோயில் பிரிப்பு: தனி அலுவலர் நியமிக்க முடிவு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், மத்தூர்மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோயில் பிரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கோயில்களுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் மத்தூர் மகிஷாசூர மர்த்தினி கோயில், ஆற்காடுகுப்பம் சோளீஸ்வரர் கோயில், கரிம்பேடு, வளர்புரம் சிவன் கோயில்கள், நெடும்பரம் கோதண்டராமர் கோயில், பெரிய நாகபூண்டி நாகேஸ்வரர் கோயில், திருப்பாச்சூர் சிவன் கோயில் உள்ளிட்ட 29 கோயில்கள் இருந்துவந்தன.

இந்த நிலையில், முருகன் கோயில் கட்டுப்பாட்டில் இருந்து திருவாலங்காடு, மத்தூர் கோயில்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. மகிஷாசூரமர்த்தினி கோயில், திருவாலங்காடு சிவன் கோயிலுக்கு அதிக வருவாய் வருவதாக தெரிகிறது. இதன்காரணமாக திருவாலங்காடு கோயில், மத்தூர் அம்மன் கோயில் ஆகிய இரண்டு கோயில்களுக்கு செயல் அலுவலர், மூன்றாம் நிலை தனியாக பொறுப்பு வழங்கப்பட்டு, முருகன் கோயில் கட்டுப்பாட்டில் இருந்து திருவாலங்காடு, மத்தூர் ஆகிய கோயில்களை விடுவித்து தனி கோயில்களாக இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இதன்காரணமாக இந்த கோயில்களுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்படும் பட்சத்தில் ஊழியர்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் தனி அலுவலர்களை கொண்டு மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. வடாரண்யேஸ்வரர்  சமேத வண்டார்குழலி அம்மன் கோயில் சிவபெருமானுக்கு ஐம்பெரும் சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக விளங்கி வருகிறது. தற்போது இந்த கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Stories: