×

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு.!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்ததில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா அவர்களால் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் இணைப்புகள், சுழல் நிதி, இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சிகள் குறித்தும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்களில் சுய உதவிக் குழு மகளிரின் பங்களிப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும்.

மேலும் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,  “அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவிக் குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும் எனவும், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக ரூ.25,000 கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து அடைந்திட வேண்டும்எனவும், தர மதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கிட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் அடைந்துள்ள இலக்குகளை விரைந்து அடைந்திட வேண்டும்“ என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்திடும் நடவடிக்கையில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும், திட்டத்தின் செயல்பாடுகளை சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடித்திட அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், இலக்கு மக்கள், நலிவுற்றோர், முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோர்களை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்களை அமைத்திட அதிக அக்கறை காட்டிட வேண்டும் எனவும், வங்கிக் கடன் இணைப்பு பெற்றுத் தரும் நடவடிக்கையில் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும்  மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.

Tags : Minister ,Udaiyanidhi Stalin ,Tamil Nadu Women's Development Agency , Minister Udhayanidhi Stalin inspects the activities of Tamil Nadu Women's Development Institute in person.
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...