×

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிகட்டு நடத்த தடை கோரி வழக்கு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம், அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கூடாது என கோரி அளித்த விண்ணப்பத்தை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி, சென்னை ஐகோர்ட்டில் மனுவில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் ஏதுமில்லாத நிலையில், மதுரையில் இருந்து காளைகளையும், சிவகங்கையில் இருந்து மாடுபிடி வீரர்களையும் வரவழைத்து வணிக ரீதியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அலகுமலை அடிவாரத்தில் பல ஆண்டுகள் பழைய மரங்கள் அகற்றப்படுகின்றன.

கடந்த 2017ம் ஆண்டு அரசாணையின்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து அரசு தான் அறிவிக்க வேண்டும். அலகுமலை அவ்வாறு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடமாக அறிவிக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டு நடத்தும் போது உணவகங்கள் அமைக்கப்பட்டு, கழிவுகள் கொட்டப்பட்டு, சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, கிராம மக்களுக்கு எந்த பயனும் தராத இந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கூடாது என மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, மனுதாரரின் விண்ணப்பத்தை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

Tags : jallikattu ,Alakthamalai ,Tirupur , Case seeking ban on jallikattu in Alakthamalai of Tirupur district: High court order for government to consider
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை