×

வாகனங்களில் விதவிதமான நம்பர் பிளேட்டுகள் சிவகாசியில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரிக்கை-விதிமுறை மீறினால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிவகாசி : வாகன நம்பர் பிளேட்டில் தலைவர்கள், நடிகர்கள் படங்களை பதிவிட்டிருந்தால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் சிவகாசியில் வாகன நம்பர் பிளேட்டில் உள்ள படங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, வீடுகளில் ஒரு சைக்கிள் இருப்பதே அரிதாகும். அப்போது வசதி படைத்தவர்கள் வீடுகளில் மட்டுமே டூவீலர்கள் இருக்கும். தொழில் அதிபர்கள் வீடுகளில் கார் உள்ளிட்ட வாகனங்கள் இருக்கும். ஆனால், 2000ம் ஆண்டுக்கு பிறகு வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்குஅதிகரித்தது. இதில் டூவீலர்கள் எண்ணிக்கை பெருமளவில் உள்ளது. டூவீலர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து, அந்தவாகனத்திற்கு என்று தனி எண் வழங்கப்படுகிறது.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கப்படும் எண் தான், நம்பர் பிளேட்டில் எழுத வேண்டும். ஆனால், சிவகாசியில் சமீப காலமாக வாகன நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள், கார்ட்டூன் படம், வாசகங்கள் இடம் பெற்று வருகிறது. சில வாகனங்களில் நம்பர் பிளேட்டில் சம்பந்தப்பட்ட நம்பர் சிறிய அளவிலும், தலைவர்கள், நடிகர்கள் படம் பெரிய அளவிலும் உள்ளது. சில நம்பர் பிளேட்களில் ‘8055’ என்ற பதிவு எண்ணை வாகன நம்பர் பிளேட்டில் ‘BOSS’ என எழுதி வலம் வருகின்றனர். சில நம்பர் பிளேட்களில் நம்பரே எழுதாமல் சினிமா பட பெயர்கள், ஜாதி பெயர்களை மட்டும் எழுதி வைத்துள்ளனர்.

சிவகாசியில் குறுகிய மோசமான சாலைகளில் அதிவேகமாக செல்வதும், முன்னால் செல்லும் வாகனத்தை ‘கட்’ அடித்து முந்தி செல்வதும் வழக்கமாகி விட்டது. அசம்பாவிதங்கள், விபத்துக்கள் நடந்தால் வாகன உரிமையாளரை கண்டறியவே பதிவு எண் கொடுக்கப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்படும் போது வாகனங்களை கண்டுபிடிப்பதில், இதுபோன்ற வித்தியாசங்கள் வட்டாரப் போக்குவரத்துறை மற்றும் போலீசாருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் செல்லும் வாகன எண்களையும், பொதுமக்கள் எளிதில் பார்த்து பிறரிடம் சொல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு புரியாதவாறு எண்கள் எழுதப்படுகின்றன.

இந்த நிலையில், கரூரை சேர்ந்த ஒருவர் நம்பர் பிளேட்களில் அரசியல் தலைவர்கள், நடிகர்களின் படங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாகன நம்பர் பிளேட்டில் உள்ள தலைவர்கள், நடிகர்கள் பதிவிட்டிருந்தால் அகற்றி அபராதம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்டிஓ,க்களுக்கு உத்தரவிட்டது. இந்த நீதிமன்றம் உத்தரவை சிவகாசியில் போக்குவரத்து துறை அகாரிகள் உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சமூக ஆர்வலர் கண்ணன் கூறும்போது, ‘‘சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தினசரி ஏராளமான வாகனங்கள் பதிவு செய்து, உரிய பதிவு எண் வழங்கப்பட்டு வருகிறது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் நம்பர் தவிர வேறு படம், வாசகம் இடம் பெறக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவில் உள்ளது. இருப்பீனும் இருசக்கர வாகனங்களில் தான் அதிகளவில் விதிமீறல் நடந்து வருகிறது.

டூவீலர்களில் நம்பர் பிளேட்களில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களின் படங்களை வரைவது பேஷனாகி விட்டது. இருசக்கர வாகன தம்பர் பிளேட்டில் வாசகங்கள், தலைவர்கள் படம், நடிகர்களின் படம் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. இவற்றை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்றம் உத்தரவை சிவகாசியில் போக்குவரத்து துறை அகாரிகள் உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும் ’’ என்றார்.

Tags : Sivakasi , Sivakasi: If leaders and actors posted pictures on vehicle number plates, they should be fined and confiscated.
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு