அர்ஜென்டினா சட்டையுடன் சாம்பியனாக விளையாட விரும்புகிறேன்: தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை.! லியோனல் மெஸ்சி அறிவிப்பு

தோகா: 32 அணிகள் பங்கேற்ற 22வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஒரு மாதமாக கத்தாரில் நடந்து வந்தது. இதன் இறுதிபோட்டி நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே நெருப்பு பற்றி கொண்டது. ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில்  லயோனல் மெஸ்சி முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் 36வது நிமிடத்தில் பிரான்ஸ் எல்லைக்குள் மெஸ்சி அசாத்தியமாக பந்தை கொண்டு சென்று சரியான நேரத்தில் டி மரியாவிடம் பாஸ் செய்தார். அதனை அவர் அற்புதமாக பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸை கடந்து கோலாக்கினார்.

இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என  முன்னிலை பெற்றது. 2வதுபாதியில் பிரான்ஸ் பதிலடி கொடுக்க கடுமையாக போராடியது. 80வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஓட்டோமெண்டி செய்த தவறு காரணமாக பிரான்சுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை எம்பாப்பே கோலாக்கி அசத்தினார். பின்னர் அடுத்த நிமிடத்திலேயே மீண்டும் எம்பாப்பே 2வது கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.  பின்னர் கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியில் 109வது நிமிடத்தில்  மெஸ்சி கோல் அடிக்க, ஆட்டம் 3-2 என பரபரப்பானது. அடுத்த சில நிமிடங்களில் அர்ஜென்டினா அணியின் பாக்ஸிற்குள் மாட்டியல் கைகளில் பந்து பட்டு செல்ல, பிரான்சுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் மீண்டும் எம்பாப்பே 3வது கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் மீண்டும் ஆட்டம் 3-3 என்ற நிலைக்கு சென்றது. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

36 ஆண்டுக்கு பின் அர்ஜென்டினா கோப்பை வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வெற்றிக்கு பின் மெஸ்சி கூறியதாவது: உலகக் கோப்பையை வெல்வதை தனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன். உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது.  நான் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. அர்ஜென்டினா  சட்டையுடன் உலகக் கோப்பை சாம்பியனாக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன், 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோற்றது உட்பட, கால்பந்தின் மிகப்பெரிய களத்தில் பல ஏமாற்றங்களை சந்தித்தேன். ஆனால், தனக்குரிய நேரம் ஒருநாள் கண்டிப்பாக வரும் என்று உணர்ந்தேன். இந்த தொடர் இப்படி முடிவது ஆச்சரியமாக இருக்கிறது. கடவுள் எனக்கு இதை வழங்கப் போகிறார் என்று நான் முன்பு சொன்னேன். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த நேரத்தில் அது நடக்கும் என்று நான் உணர்ந்தேன். உலகக் கோப்பை அழகானது, என்றார்.

Related Stories: