×

மன்னார்குடியில் போலீசார் அதிரடி 178 கிலோ பான்மசாலா, குட்கா பறிமுதல்-சொகுசு காருடன் இருவர் கைது

மன்னார்குடி : மன்னார்குடியில் நடந்த சோதனையில் 178 கிலோ பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, சொகுசு காருடன் இருவரை கைது செய்தனர்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களை சட்ட விரோதமாக பதுக்கி விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திரு வாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் தலை மையில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் கண்ணா உள்ளிட்ட போலீசார் மன்னார்குடி நகரத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், மன்னார்குடி தாமரைக்குளம் வடகரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சொகுசு கார் ஒன்று நிற்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று காரில் சோதனையிட்டதில் அதில் சாக்கு பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 161 கிலோ பான் மசாலா மற்றும் குட்காவை போலீசார் கைப்பற்றி மன்னை நகரை சேர்ந்த ஹாஜா மொய்தீன் (46) என்பவரை கைது செய்து சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

அதுபோல் மன்னார்குடி மன்னை நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள சலூன் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனையிட்டு, அங்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 17 கிலோ குட்காவை கைப்பற்றி கடையின் உரிமையாளர் செருமங்கலம் கிராமத்தை சேர்ந்த மகேஸ் வரன் (36) என்பவரை கைது செய்து, விசாரணை மேற் கொண்டனர்.

178 கிலோ குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து இருவரை கைது செய்ய துரித நடவடிக்கை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா தலைமையிலான எஸ்ஐ முருகன், பயிற்சி எஸ்ஐ கோகிலா, எஸ்எஸ்ஐக்கள் சதாசிவம், உதயகுமார், வீரையன், அமல்தாஸ், முதல்நிலை காவலர்கள் கார்த்திகேயன், துரை, காவலர் சுரேஷ் உள்ளிட்ட குழுவினரை டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் பாராட்டினார்.மேலும், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைவஸ்துக்களை பதுக்கி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எச்சரித்தார்.



Tags : Mannargudi ,Panmasala ,Gutka , Mannargudi: In a raid in Mannargudi, police seized 178 kg of Panmasala and Gutka products and seized two people along with a luxury car.
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...