பவானி அருகே தெருநாய் துரத்தியதால் குடிநீர் தொட்டி மீது ஏறி தஞ்சமடைந்த பெண்-இறங்க முடியாமல் தவித்ததால் பரபரப்பு

பவானி : ஈரோடு மாவட்டம், பவானி அருகே கல்பாவி பகுதியில் சுமார் 40 வயது பெண் ஒருவர் நேற்று அதிகாலை நடந்து சென்றுள்ளார். அப்போது, தெருநாய்கள் குரைத்தபடி பின்னாலே துரத்திச் சென்றன. அப்பெண் நாய்களை துரத்த முயன்றபோது, சுற்றிவளைத்து கடிக்க முயன்றன. இதனால், அதிர்ச்சியிலும் பயத்திலும் ஆழ்ந்த அப்பெண் அருகில் இருந்த 50 அடி உயரமுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் பக்கவாட்டு ஏணியின் மீதேறி, தொட்டியின் மேற்பரப்புக்கு சென்றுவிட்டார். ஆனால், மீண்டும் ஏணி வழியாக இறங்க தெரியாமல் தவித்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதியினர் பவானி தீயணைப்பு நிலையத்துக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் குடிநீர் தொட்டி மீது தவித்த பெண்ணிடம் மெதுவாக பேச்சு கொடுத்து அச்சத்தை அகற்றினர். பின்னர், நாற்காலி முடிச்சு போட்டு கயிற்றில் கட்டி பாதுகாப்பாக கீழே கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பேசிய அப்பெண், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், தெருவில் ஆதரவின்றி சுற்றி திரிந்தவர் எனவும் தெரியவந்தது. பின்னர், பொதுமக்கள் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு அப்பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: