பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுக்கு தயாராகுது பாலமேடு: காளைகள், ‘காளையர்’ பயிற்சிகளில் மும்முரம்

அலங்காநல்லூர்: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பொங்கலன்று (ஜன. 15) மதுரை அவனியாபுரம், மறுநாள் மாட்டுப்பொங்கலன்று (ஜன. 16) பாலமேடு, ஜன. 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ஜல்லிக்கட்டுக்கான முன்னோட்ட நிகழ்வுகளை முதல்கட்டமாக மதுரை மாவட்டம், பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் துவக்கியுள்ளனர். அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு பொதுமக்கள், முக்கிய பிரமுகர்களிடம் வழங்கி வருகின்றனர். நாளை மறுதினம் முதல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ள மஞ்சமலை ஆற்றுத்திடலை தூய்மைப்படுத்தும் பணிகளை துவக்க உள்ளனர்.

அதே நேரம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மிகத்தீவிரமாக நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சியை வழங்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள எழுத்துபூர்வமான வாதத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரும் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு விவசாயத்தோடு ஒன்றிப்போனது. இப்போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. இது பொழுதுபோக்கு விளையாட்டல்ல.

காளைகளை கவுரவிக்கும் விளையாட்டு. நாட்டு மாட்டினங்களை பாதுகாக்கவே நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசு தொடர்ந்து சிறப்பான வாதங்களை முன் வைத்துள்ளது. எனவே, இம்முறையும் சிக்கலின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமென்ற நம்பிக்கை தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுகுறித்து பாலமேடு விழா கமிட்டி செயலாளர் பிரபு  கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டு போட்டிகளை நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு தெரிவித்துள்ள நெறிமுறைகள்படி, மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

முதல் கட்டமாக வரும் ஜன. 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசல் முன்பு பாரம்பரிய முறைப்படி விழா அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்த பின்பு, பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கி வருகிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அழைப்பிதழ் வழங்க உள்ளோம். அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோரின் ஆலோசனையின்படி விழா கமிட்டி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: