×

நடுவானில் பெண் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி சவுதி விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது

சென்னை: சென்னை வான் எல்லையில் சென்ற விமானத்தில், ஒரு பெண் பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் சென்னை வான் எல்லை வழியாக சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் 378 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதில் மலேசியாவை சேர்ந்த ஜமீலா பிந்தி (58) என்ற பெண், தனது 2 உறவினர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த விமானம் நடுவானில் பறந்தபோது, ஜமீலா பிந்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார்.

இதுகுறித்து விமான பணிப்பெண்களிடம் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். விமானத்தில் ஜமீலா பிந்திக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.  இதுகுறித்து உடனடியாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் நள்ளிரவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், ஜமீலா பிந்தியை பரிசோதித்தனர். அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் இருந்தது.

இதைத்தொடர்ந்து, ஜமீலா பிந்தி மற்றும் அவரது 2 உறவினர்களுக்கு விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவசரகால மருத்துவ விசாக்களை வழங்கினர். பின்னர் விமானத்தில் இருந்து 3 பேரையும் கீழே இறக்கினர். சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்தி, உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 375 பயணிகளுடன் மலேசியாவுக்கு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது.

Tags : Chennai , A female passenger suffered a sudden chest pain mid-air and the Saudi flight made an emergency landing in Chennai
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்