×

திருவொற்றியூர் ரயில்வே கேட் பகுதியில் 5 மாதமாகியும் தொடங்கப்படாத ரயில்வே சுரங்கப்பாதை பணிகள்: பொதுமக்கள் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ரூ.33 கோடி செலவில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், 5 மாதங்கள் ஆகியும் பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவொற்றியூர் கிராம தெரு ரயில்வே கேட் வழியாக பாலகிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர், ராமசாமி நகர், கார்கில் நகர் மற்றும் வெற்றி விநாயகர் நகர் போன்ற மேற்கு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவர்கள், தொழிலாளர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

இந்த ரயில்வே கேட்டை கடந்து, மின்சார ரயில்கள் செல்லும்போது பொதுமக்கள் நீண்ட நேரம் வாகனங்களுடன் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கடந்த ஜூன் மாதம் மாநில அரசுடன் இணைந்து, ரயில்வே துறை ரூ.33 கோடி செலவில் இங்கு ரயில்வே சுரங்க பாதை அமைக்க திட்டமிட்டது.

இதற்காக, அப்பகுதியில் இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை ரயில்வே துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும், இந்த வழியாக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு அங்கு சாலை நடுவே தூண்கள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், ஒரு சில தினங்களில் பணிகள் துவக்கப்படும் என்று தெரிவித்திருந்த ரயில்வே துறை, சுமார் 5 மாதங்கள் ஆகியும் இதுவரை பணிகளை துவக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.  

இந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி, மேற்கு பகுதிக்கு செல்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும் குடிநீர், கல்லூரி வாகனங்கள், ஆட்டோ மற்றும் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் போன்றவை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை பணியை விரைவாக தொடங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ரயில்வே துறை அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் பல்வேறு காரணங்களை கூறி, இதுவரை பணிகளை துவக்காமல் கிடப்பில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், ‘‘ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக இங்கிருந்த குடியிருப்புகளை ரயில்வே துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினார்கள். ஆனால், இதுவரை அந்த பணிகள் துவக்கப்படவில்லை. மேலும் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடமும் வழங்கப்படவில்லை. சுரங்கப்பாதை பணி துவங்காமல் இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்,’’ என்றனர்.

தாமதம்
ரயில்வே துக்ஷகாரிகள் கூறுகையில், ‘‘ரயில்வே சுரங்கப்பாதை அமையக்கூடிய இடத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் மற்றும் மின் வயர்களை இடமாற்றம் செய்யப்படாததால், தங்களால் சுரங்கப்பாதை பணிகளை துவங்க முடியவில்லை,’’ என்றனர்.

Tags : Thiruvotteur Railway Gate ,Public Awadi , Thiruvottiyur railway gate, railway tunnel works, public inconvenience
× RELATED மீஞ்சூர் அருகே திறக்கப்பட்டு...