×

கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் பயிற்சி செய்த வாலிபர் பஸ் டிரைவர் இடையே தகராறு: போக்குவரத்து பாதிப்பு

துரைப்பாக்கம்:  கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை, முட்டுக்காடு இடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஏராளமானோர் சைக்களிங் பயிற்சி செய்கின்றனர். இதற்காக அந்த பகுதி சாலை ஒரு வழிபாதையாக மாற்றப்படும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது, விபத்துகள் நடைபெற்றன.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி ஒரே திசையில் சென்ற 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியானார். கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, ஒருவழிப்பாதையாக மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், சாலை மறியல் செய்தனர். இதனால் போலீசார் ஒரு வழிபாதையாக மாற்ற மாட்டோம் என உறுதி அளித்தனர்.

இந்நிலையில், நேற்று இருவழிபாதையில் வாகனங்கள் சென்றன. இதில், சைக்கிளிங் பயிற்சியில் சிலர் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து வந்தது. அப்போது, சைக்கிளிங் சென்றவர்கள் பேருந்துக்கு வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பேருந்து சைக்கிளை முந்தி சென்றுள்ளது. அப்போது சைக்கிள் ஓட்டி வந்த வாலிபர் பேருந்து ஓட்டுநரிடம்,  ‘‘ஏன் மோதுவது போல் செல்கிறாய்’’ என கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த வாலிபர் பேருந்து பக்கவாட்டில் தட்டியுள்ளார். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றது.  இதையடுத்து, பேருந்து நீலாங்கரை காவல் நிலையம் அருகே வந்தபோது சைக்கிளில் வந்த வாலிபர் பேருந்தை வழிமறித்து சைக்கிளை பேருந்து முன் போட்டு, பேருந்து ஓட்டுனரிடம்  தகராறு செய்தார். தகவலறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்க ள்  அங்கிருந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Wolliber ,East Coast Road , East Coast Road, youth practicing cycling, traffic damage
× RELATED குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை...