×

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது அடையாறு ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் பலி: ட்ரோன் கேமரா, படகு மூலம் 18 மணி நேரம் தேடி உடல் மீட்பு

சென்னை: சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் - வனிதா தம்பதியின் 14  வயது மகன் சாமுவேல், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சாமுவேல், தனது  நண்பர்களுடன் அடையாறு ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத  விதமாக, சாமுவேல் நீரில் மூழ்கி மாயமானார்.


தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர், ரப்பர் படகு மூலம் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் சிறுவனை தேடும் பணி சிரமமாக இருந்தது. இதையடுத்து  அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகம் சார்பில்,  ட்ரோன் கேமரா மூலம் சிறுவனை தேடும் இரவு முழுவதும் நடைப்பெற்றது.

ஆற்றில்  நீரோட்டம் அதிகமாக இருப்பதாலும், கீழ் பகுதியில் சேறும், சகதியாக  இருந்ததாலும் சிறுவனை தேடுவது சிரமமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தேடியும் மாணவன் கிடைக்காத நிலையில், நேற்று 2வது நாளாக  தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மற்றும் ரப்பர் படகு மூலம் தேடும் பணியில்  ஈடுபட்டனர். இந்நிலையில், 18 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் சடலமாக நேற்று மீட்கப்பட்டான். மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Adyar river , Adyar river, 9th class student killed, drone camera,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்