கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்துக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்துக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 24 சதுர கி.மீ., பரப்பளவில் பசுமைமாறா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட வெளிமான் மற்றும் புள்ளிமான், 500க்கும் மேற்பட்ட குரங்குகள், 100க்கும் மேற்பட்ட குதிரைகள், நரி, முயல், மயில் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

மான்களுக்கு தண்ணீர் வசதிக்காக 17 செயற்கை தொட்டிகள், 40 இயற்கையான குளங்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் வனவிலங்கு சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது தொட்டியில் தண்ணீரை வனத்துறையினர் நிரப்புவர்.

கடந்த காலங்களில் சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மான்கள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறியது. இந்தாண்டு கோடைகாலத்தில் மழை பெய்ததால் வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வரவில்லை. இதனால் மான்களுக்கு புற்கள், தண்ணீர் கிடைத்ததால் காட்டை விட்டு வெளியேறவில்லை. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகளவில் மழை பெய்து தண்ணீர் தேங்கியதால் கோடியக்கரை சரணாலயம் பல நாட்கள் மூடப்பட்டன. இதனால் வனவிலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிந்தது.

தண்ணீர் வடிந்ததால் கோடியக்கரை சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வார விடுமுறை நாட்களில் மேம்பாட்டு குழு சார்பில் உணவகம் அமைத்து உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை சுற்றி பார்ப்பதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. காலை 6 முதல் 10 மணி வரை, மாலை 3 மணி முதல் 6 மணி வரை வனவிலங்குகளை அதிகளவில் காணலாம் என்று கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.

Related Stories: