×

இன்று உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி; அர்ஜென்டினா பிரான்ஸ் மோதல்: வரலாறு படைக்கப்போவது யார்?

தோகா: பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடக்கிறது.
22வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இதுவரை 63 போட்டிகள் முடிவடைந்துள்ளன. 64வது போட்டியான இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் அர்ஜென்டினா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது.

குரூப் சுற்றின் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் அடைந்த தோல்விக்கு பின், அர்ஜென்டினா அணி பெரும் எழுச்சி கண்டது. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சியின் கடைசி உலகக்கோப்பைத் தொடர் என்பதால், உலகம் முழுவதும் அர்ஜென்டினா அணிக்கு ரசிகர்களிடையே அதிகளவில் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது.

கால்பந்தாட்டத்தில் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் மெஸ்சி எத்தனை விருதுகள், பட்டங்கள், சாதனைகள் படைத்திருந்தாலும், உலகக்கோப்பையை இதுவரை பார்த்ததில்லை. அதனால் இது மெஸ்சியின் உலகக்கோப்பை என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் பேசி வருகிறார்கள். மறுபுறம் பிரான்ஸ் அணி சாம்பியன் சாபங்களை கடந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பென்சிமா, போக்பா என நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி இறுதிவரை வந்துள்ளதால், அர்ஜென்டினா ரசிகர்கள் சிறிது அச்சத்துடனே இருக்கிறார்கள்.

அர்ஜென்டினா அணியின் செயல்பாடுகளை பொறுத்தவரை சவுதி அரேபியாவிடம் அடைந்த தோல்விக்கு பின், ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து முன்னேறியது. போலந்து, மெக்சிகோ அணிகளுடன் நடந்த போட்டிகளில் பெரிதாக அட்டாக் செய்யவில்லை என்றாலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தான் முழுமையாக இறங்கி அட்டாக் செய்தது. ஆனால் நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தான் அர்ஜென்டினா தடுப்பாட்டம் சோதனைக்கு உள்ளானது.
ஏனென்றால் கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்ற நிலையில், கடைசி 10 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து நெதர்லாந்து அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் அரையிறுதியில் வலிமையான குரோஷியா அணியை அர்ஜென்டினா முழுமையான திட்டத்துடன் தடுத்து நிறுத்தியது. ஒவ்வொரு போட்டியிலும் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த போட்டியில் களமிறங்கி வெற்றிபெற்றது.

மறுபக்கம் பிரான்ஸ் அணியை பொறுத்தவரை, நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற லீக் போட்டியில் துனிஷியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் நட்சத்திர வீரர்கள் களமிறக்கப்பட்டும், தோல்வியை தவிர்க்க முடியவில்லை. தொடர்ந்து நாக் அவுட் போட்டியில் போலந்தை எளிதாக வீழ்த்தி இருந்தாலும், வலிமையான இங்கிலாந்திடம் நூலிழையில் தப்பித்தது.

அதேபோல் அரையிறுதிப் போட்டியில் மொராக்கோ அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை மிக சுலபமாக தடுத்து நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்தது. ஆனால் அர்ஜென்டினா அணிக்கு இருக்கும் சாதகம் என்னவென்றால் நட்சத்திர வீரர் மெஸ்சி, கோல் அடிப்பதோடு, கோலை உருவாக்கும் இடத்திலும் ஆடி வருகிறார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 வீரர்கள் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தியும் மெஸ்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அதேபோல் மெஸ்சி இல்லையென்றாலும் ஆல்வரஸ் தனி ஒரு வீரராக வேகத்தை கொண்டு சாகசங்கள் செய்ய முடிகிறது.

பிரான்ஸ் அணியில் குரூப் சுற்றுகளில் மாயாஜாலம் செய்த எம்பாப்பேவால், நாக் அவுட் போட்டிகளில் கோல் அடிக்க முடியவில்லை. அதேபோல் ஒலிவியே ஜீரூட் அடிக்கும் ஷாட்களில் 50 சதவீதம் கோலாக மாறுகிறது. அதுமட்டுமல்லாமல் பாக்ஸ்-க்குள் ஆடும் போது அர்ஜென்டினா அணி வீரர்கள் பெனால்டி கொடுக்க கூடாது என்ற எச்சரிக்கையுடன் ஆடுகிறார்கள். ஆனால் பிரான்ஸ் அணியில் அப்படியில்லை.

இதுவரை அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதியுள்ள 12 போட்டிகளில் 6 போட்டியில் அர்ஜென்டினா, 3 போட்டியில் பிரான்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றிபெற அர்ஜென்டினா அணிக்கே அதிக சாதகம் என்றாலும், பிரான்ஸ் அணியை அவ்வளவு எளிதாக எடை போடமுடியாது.

இதனால் இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி கூட்டணி கிரீஸ்மேன், ஒலிவியே ஜிரூட், வரனே மற்றும் கோல் கீப்பர் லோரிஸ் ஆகியோருடன் பிரான்ஸ் அணி, இதுவரை 9 உலகக் கோப்பை ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இவர்கள் பங்கேற்று விளையாடிய இந்த 9 ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக் கூட்டணி, 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags : World Cup Soccer Finals ,Argentina ,France , World Cup Soccer Finals Today; Argentina France Clash: Who Will Make History?
× RELATED சென்னை -பாரிஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: 5 மணி நேரம் தாமதம்