×

நாகர்கோவிலில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த, கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்: வீடு, வீடாக ஆய்வும் தொடக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல் பாதிப்பை கண்டறியும் வகையில் வீடு, வீடாக ஆய்வு பணியும் தொடங்கி உள்ளது. குமரி மாவட்டத்தில் மழை, பனி என மாறி, மாறி வரும் சீதோஷ்ண நிலை காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு உள்ளது.

அதிகாலை வேளையில் வெளியே வர முடியாத அளவுக்கு பனியின் தாக்கம் இருக்கிறது. இதற்கிடையே கொசு புழுக்களின் அதிக உற்பத்தியால் தற்போது டெங்கு பரவலும் ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு மிக வேகமாக ரத்தம் கவுண்ட் குறைந்து வருகிறது. இதையடுத்து தற்போது காய்ச்சல் பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும், வகையில் நாகர்கோவில் மாநகராட்சியில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகர் நல அலுவலர் ராம்குமார்  தலைமையில் மாநகராட்சியில் உள்ள 318 கொசு ஒழிப்பு படையினர்,   மலேரியா கண்டறியும் குழுவினர் மற்றும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார  மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள்  ஒருங்கிணைக்கப்பட்டு  7 குழுக்களாக பிரிந்து ஆய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று (17ம் தேதி) காலையில் இருந்து ஆய்வு தொடங்கியது. வீடுகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு பணி மேற்ெகாள்ள உள்ளனர். சுற்றுப்புறங்களில்  உள்ள உடைந்து போன பிளாஸ்டிக் பொருட்கள்,  பூந்தொட்டிகள், டயர்கள்,  சிரட்டைகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காத வகையில் அறிவுரைகளும் வழங்கி வருகிறார்கள்.

தண்ணீர் தொட்டிகள், வீட்டில் பாத்திரங்களில் இருக்கும் தண்ணீர், டிரம் ஆகியவற்றில் கொசு புழுக்கள் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்கிறார்கள். பிரிட்ஜ், ஏ.சி. ஆகியவற்றில் தேங்கும் தண்ணீரை தினமும் அகற்றும்படியும் அறிவுறுத்தி வருகிறார்கள். தனியார் நிறுவனங்களில் கொசு புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும், எனவே தண்ணீர் ேதங்கும் வகையில் பொருட்கள், டயர்களை ஆங்காங்கே வைக்க கூடாது என்றும் கூறி உள்ளனர்.

ஒவ்வொரு குழுவும் தினசரி ஒரு வார்டு வீதம் கொசு  ஒழிப்பு மற்றும் டெங்கு கடடுப்படுத்தும்  பணிகளில் ஈடுபடுவார்கள். இந்த ஆய்வு குழுவினர் வீடுகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா? காய்ச்சல் எத்தனை நாட்களாக உள்ளது? என்பதை கண்டறிந்து மருத்துவ குழு சார்பில் அந்த பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும். மேலும் தூய்மை பணியும் மேற்கொள்ளப்படும்.

ஆய்வு பணிகளின் தொடர்ச்சியாக தற்போது கொசு புழுக்கள் அடிக்கும் பணியும் தீவிரமாக தொடங்கி உள்ளன. அதன்படி நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஆசாரிமார்தெரு, நாகராஜா கோயில் ரத வீதி, குறுக்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது. மாநகராட்சி ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில், தொடர்ந்து 2, 3 நாட்கள் கொசு மருந்து அடிக்கும் பணி நடக்கும் என அதிகாரிகள் கூறினர்.

Tags : Nagarkovil , Intensification of mosquito spraying to control fever in Nagercoil: Door-to-door survey begins
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...