திருமலை: ஆந்திராவில் நள்ளிரவில் தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மற்றும் கார், வீடுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆந்திரா மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் உள்ள மாச்சர்லாவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ‘இதி ஏமி கர்மா ராஷ்டிரம்’ என்னும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அக்கட்சியினர் நேற்று மாலை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ரிங் ரோட்டில் வீதி வீதியாக சென்று, ‘முதல்வர் ஜெகன்மோகன் அரசால் மாநிலம் பின் தங்கியுள்ளது. எவ்வித வளர்ச்சியும் இல்லை’ என துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அப்போது, அதே இடத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் திரண்டு இருந்ததால், இருதரப்பு தொண்டர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பயங்கரமாக மோதிக் கொண்டனர். இரு கட்சியினரும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கி கொண்டனர். இதில், இருதரப்பை சேர்ந்த பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த வந்த மாச்சர்லா போலீசார், இருதரப்பினரையும் கலைத்தனர். பதற்றம் நிலவியதால், மாச்சர்லா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அன்று இரவு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் பிரம்மாவின் வீடு, அலுவலகத்தை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தீ வைத்து கொளுத்தினர். தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் ஒருவரின் வீடும் சேதப்படுத்தப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களின் பல வாகனங்கள் அடித்து நொறுக்கி தீ வைத்து எரிக்கப்பட்டன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போலீசார் உதவியுடன் தாக்குதல் நடத்துவதாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.