
புதுச்சேரி: புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் சமூக அமைப்புகள் ஒன்று திரண்டு மாநில அந்தஸ்து வேண்டுமென முதல்வர் ரங்கசாமியிடம் மனு கொடுத்தனர். அப்போது அவர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக, மக்களுக்காக தனிமாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற வேண்டும். தினமும் மன உளைச்சலாகத்தான் உள்ளது. இவை வெளியில் உள்ள மக்களுக்கு தெரியவாய்ப்பில்லை. நான் யாருக்காக துடிக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒரு திட்டத்தை செய்யலாம் என்று கோர்ட் உத்தரவு கொடுக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் என்கிட்டேயே அமர்ந்து கொண்டு என்று கோணவழி காட்டுகிறார்கள்.
இதேபோன்று மற்றொரு வழக்கில் செய்யக்கூடாது என உத்தரவு வந்தவுடன் அதிகாரிகள் உடனடியாக எல்லா அரசுத்துறை அதிகாரிகளுக்கும் 5 நிமிடத்தில் சுற்றறிக்கை அனுப்புகின்றனர். எங்களிடம் காட்ட வேண்டும் என்று கூட நினைப்பதில்லை. புதுச்சேரி வளர்ச்சி அடையனும், நல்லா இருக்கனும், மக்கள் சுபிட்சமாக இருக்கனும் தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் நிச்சயமாக மாநில அந்தஸ்து வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. ஒரு சம்பிரதாயத்துக்காக தான் இந்த விடுதலை நாள் விழாவை கொண்டாடி வருகிறோம். ஆனால் உண்மையான விடுதலை என்பது நமக்கு இல்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.