×

 டீ எஸ்டேட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லி மருந்து பயன்பாடு: முதல்வருக்கு தொழிலாளர்கள் கடிதம்

சென்னை: தி பெரிய கருமலை டீ எஸ்டேட் நிறுவனத்தின் குரூப் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தி பெரிய கருமலை டீ எஸ்டேட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தடை செயயப்பட்ட என்டோசல்பான் என்ற பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தி தேயிலைக்கு மருந்தடித்து வருகின்றனர். இந்த மருந்து தேயிலை இலையில் உள்ள சாறை உறிஞ்சும் ஒருவகையான பூச்சியை கொல்லும். என்டோசல்பான் மருந்தை பயன்படுத்துவதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்பது மிக அதிகம். கேன்சர், பார்வை கோளாறு, பெண் தொழிலாளர்களுக்கு கருப்பை பாதிப்பு, குழந்தைகளுக்கு மூச்சு திணறல் போன்ற அதிக பாதிப்பை தரக்கூடிய மருந்து.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இதை பயன்படுத்தியதால் மருந்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் இந்த மருந்து தடை செய்யப்பட்டு, மருந்தை பயன்படுத்திய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, இந்த மருந்தை தெளிப்பவர்களும், குடிநீரை குடிப்பவர்களும் அதிக பாதிப்பை 5 ஆண்டுகளில் சந்திக்க நேரிடும். வனவிலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு அவைகள் இறப்பதற்கும் காரணமாக இந்த மருந்து அமைகிறது. இந்த மருந்தின் பெயரை என்டோசல்பான் என்று சொல்லாமல், எம் என்று சொல்லி ஏமாற்றி தேயிலைக்கு தெளிக்கப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும்.

தி பெரிய கருமலை டீ எஸ்டேட்டில் உள்ள 11வது டிவிசனில் மருந்து அடிப்பவர்கள் 66 பேர், மருந்து கலப்பவர்கள் 11 பேர், மருந்து எடுத்து தருபவர்கள் மற்றும் சூபர்வைசர்கள் 11 பேர் உள்ளனர். அவர்களிடம் நேரடியாக விசாரணை செய்து, இதற்கு காரணமான கருமலை குரூப் மேலாளர் கிருஷ்ணகுமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வேண்டும். மற்ற மருந்துகளை விட குறைந்த விலைக்கு கிடைப்பதாலும், மருந்தை மொத்தமாக கொள்முதல் செய்வதால் குரூப் மேலாளருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறையாமல் கமிஷன் கிடைக்கிறது. எனவே குரூப் மேலாளர் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister , Pesticide use banned in tea estate: Workers' letter to Chief Minister
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...