திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு விளையாட்டில் ஆர்வமுள்ள திமுகவினர், விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்: அணிச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி அறிவிப்பு

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி, விளையாட்டில் ஆர்வமுள்ள திமுகவினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட, மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் வரையிலான நிர்வாக கட்டமைப்பு கீழ்க்காணும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

மாவட்ட, மாநகர, பகுதி மற்றும் ஒன்றியத்திற்கு ஒரு அமைப்பாளர் மற்றும் 5 துணை அமைப்பாளர்களும், பேரூர் கழகத்திற்கு ஒரு அமைப்பாளர் மற்றும் மூன்று துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேற்குறிப்பிட்ட பொறுப்புகளுக்கு விளையாட்டில் ஆர்வம் உள்ள திமுகவினர், மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டிருக்க கூடிய வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தற்போது கல்லூரியில் பயிலக் கூடிய மாணவர்கள் உள்ளிட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு மேம்பாட்டு அணி பொறுப்பிற்கு விண்ணப்பித்தவர்களிடம், அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி, அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை திமுக தலைவர் ஒப்புதலுடன் நியமிக்கப்படுவார்கள். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில நிர்வாகிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள மாவட்டங்களின், மாவட்டச் செயலாளர்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு மாவட்ட, மாநகர அளவிலான அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக நேர்காணல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர் ஆகியவற்றின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு வரவிரும்புகிறவர்கள், தலைமை கழக விளையாட்டு மேம்பாட்டு அணி வெளியிட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து வயதிற்கான சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விவரத்தினை இணைத்து வரும் 28ம் தேதிக்குள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் வழங்கிட வேண்டும். மனுவின் மற்றொரு நகலை, செயலாளர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி, அண்ணா அறிவாலயம், எண் 369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்த படிவம் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து  dmksdwing@gmail.com என்ற கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு திமுக விளையாட்டு, மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி கூறினார்.

Related Stories: