மேட்டூர் அணை நீர்மட்டம் 159 நாளாக 100 அடிக்கு கீழ் குறையாமல் நீடிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 159 நாளாக 100 அடிக்கு கீழ் குறையாமல் நீடிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந் துள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 159வது நாளாக 100 அடிக்கு குறையாமல் நீடித்து வருகிறது.

நடப்பு நீர் பாசன ஆண்டில் ஜூலை 12ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வந்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரி நீர் திறப்பு காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளம் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ஜூலை 16ம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.

தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தாலும் பருவ மழை மற்றும் புயல் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று வரை தொடர்ந்து 159 நாட்களாக 100 அடிக்கு குறையாமல் நீடித்து வருகிறது. நடப்பு நீர் பாசன ஆண்டில் பருவமழை மற்றும் புயல் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு 657 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 174 டி.எம்.சி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் 7 டி.எம்.சி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

உபரிநீராக மேட்டூர் அணையிலிருந்து 466 டிஎம்சி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. நடப்பு நீர் பாசன ஆண்டில் அடுத்தடுத்து மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியுள்ளது. மேட்டூர் அணை 1234 நாட்கள் நிரம்பிய நிலையில் இருந்துள்ளது. தற்போது காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

நீர் வரத்து குறைந்தாலும் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும். அதேபோல் அடுத்த ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 14,600 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 11 மணியளவில் 9,600 கனஅடியாக சரிந்தது. இன்று காலையும் நீர்வரத்து 9,600 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 9,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 10வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: