உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதல்; மூன்றாம் உலகப் போர் மூளுமா?: அதிபர் புடினின் குரு சூசகம்

மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற கருத்து அடிப்படையில், அதிபர் புடினின் குரு அலெக்சாண்டர் டுகின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 11 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், போரினால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக பலமுறை அச்சுறுத்தியுள்ளார். இப்போது அவரது சகாக்களில் ஒருவர் புடினின் ‘மூளை’ என்று அழைக்கப்படும் அவரது குருவான அலெக்சாண்டர் டுகின், இந்திய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரண்டு சாத்திய கூறுகள் மட்டுமே உள்ளது.

ஒன்று ரஷ்யா வெற்றி பெறும்போது போர் முடிவடையும். ஆனால் இது எளிதானது அல்ல. இரண்டாவது வாய்ப்பு என்னவென்றால், இந்த உலகம் அழிந்தால், இரு நாடுகளுக்கு இடையிலான போரும் முடிவடையும். எப்படியாகிலும் இந்த முறை எந்தவொரு எதிரியிடமும் ரஷ்யா தோற்காது. நாம் வெற்றி பெற வேண்டும்; அதற்காக அரசுக்கு முழு ஆதரவளிப்போம்.

தற்போது நடப்பது உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சண்டையோ அல்லது ரஷ்யாவிற்கும் மேற்கத்திய ஆதரவு குழுவுக்கும் இடையிலான சண்டையோ அல்ல. கலாசாரத்தை தாக்கும் தீய சக்திக்கும், மனிதகுலத்திற்கும் இடையிலான மோதலாகும்’ என்றார். அலெக்சாண்டர் டுகின் கருத்துபடி பார்த்தால், எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா அணுஆயுத தாக்குதலை நடத்தலாம் என்றும், அதன்பின் மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Stories: