×

ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.1 கோடி இழந்ததாக வீடியோ அனுப்பி வாலிபர் தற்கொலை முயற்சி: நண்பர்கள் காப்பாற்றினர்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.1 கோடி பணம் இழந்ததாக கூறி, நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் விஜய் (33), பி.காம். படித்து விட்டு, தந்தைக்கு துணையாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மாதாந்திர சீட்டும் நடத்தி வருகிறார். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், விஜய் வீட்டில் இருந்த போது, தினமும் ஆன்லைன் ரம்மியை விளையாடி வந்துள்ளார். இதில், ரூ.1 கோடி வரை பணத்தை இழந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அதில், ‘ஆன்லைன் ரம்மியில் ரூ.1 கோடி வரை பணத்தை இழந்து விட்டதால், நான் உயிரை மாய்த்து கொள்கிறேன். ஆன்லைன் ரம்மிக்கு எனது மரணம் கடைசியாக இருக்கட்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்’ என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்தனர். அப்போது, அருகில் இருந்த கிணற்றில் குதிக்க முயன்ற விஜயை, தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினர். இதனிடையே, இந்த வீடியோவை பார்த்த ராசிபுரம் போலீசார், விஜயின் வீட்டிற்கு சென்று, அவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி நஷ்டம் அடைந்தாரா?, சீட்டு பணத்தில் வேறு ஏதேனும் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தாரா?, அல்லது பணம் முதலீடு செய்தவர்களை ஏமாற்றுவதற்காக இதுபோல நாடகமாடுகிறாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Rasipuram , Teenager attempts suicide by sending video of losing Rs 1 crore in online rummy near Rasipuram: Friends save him
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து