×

நீர்வரத்து சீரானதால் சுருளியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

கூடலூர்: நீர்வரத்து சீரானதையடுத்து, சுருளி அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை நேற்று அனுமதி வழங்கியது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியும் ஒன்று. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிப்பாறை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.

கடந்த 2 தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மழை குறைந்ததால், அருவியில் தண்ணீர் வரத்து சீரானது. இதனையடுத்து நேற்று காலை முதல் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு கம்பம் கிழக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Suruli , The flow of water is smooth, bathing in the coil is allowed, and the tourists are happy
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...