×

குன்னூர் பள்ளத்தாக்கில் 10 யானைகள் முகாம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

குன்னூர்: குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் 10 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறுவனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சோலைக்காடுகள் அதிகம் உள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது 2 குட்டிகளுடன் 20 யானைகள் உணவு தேடி வந்துள்ளன. தாய் யானை தனது குட்டிகளை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடன் நடந்து கொள்கிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லும் வழியை குட்டிகளுக்கு நன்கு கற்பிக்கின்றது. அதன்படி குட்டிகளும் பின்னே செல்கின்றன.

இரண்டு குட்டிகளுடன் விளையாடியபடி செல்வது காண்போரை ரசிக்க வைக்கிறது. யானைகள் அவ்வப்போது சாலையை கடக்கும்போது சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த 10 யானைகளும் கேஎன்ஆர், காட்டேரி உள்ளிட்ட பகுதியில் சாலையை கடந்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் மலை ரயில் தண்டவாள பகுதியில் முகாமிடுகின்றன. அங்கு அவற்றிற்கு தேவையான உணவு அதிகமாக கிடைக்கிறது. தாய் யானை பள்ளத்தாக்கு இடுக்குகளில் செல்வதை கண்டு குட்டிகளும் அதை போலவே நடந்து செல்வதாக நினைத்து வழுக்கி கொண்டு செல்வது வேடிக்கையாகவும் உள்ளது.

யானைக் கூட்டத்தை பாதுகாக்க வயதில் மூத்த யானைகள் முன்னும் பின்னும் வழிநடத்தி செல்கின்றன. 10 யானைகளின் வரவால் குன்னூர் பகுதியில் உள்ள சோலை மரக்காடுகள் மற்றும் பறவைகள் உற்சாகம் அடைந்துள்ளன. வெளியூர் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் யானைகள் உலா வரும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வாகனங்களில் தனியே செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இரவில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags : Elephants Camp ,Gunnur Valley ,Forest Department , Coonoor Valley, 10 elephant camps, forest department alert to motorists
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...