×

நெல்லை - நாகர்கோவில் இடையே பணிகள் விறுவிறுப்பு இரட்டை ரயில் பாதையை அக்.2023க்குள் முடிக்க திட்டம்: தெற்கு ரயில்வே தகவல்

நெல்லை: தென் மாவட்டங்களுக்கு இரட்டை ரயில்பாதை இல்லை என்பதை காரணம் காட்டியே ரயில்வே, புதிய ரயில்களை இயக்குவதில்லை. அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி - மதுரை வரையுள்ள ரயில்பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற தென் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் கடந்த 2015-16ம் ரயில்வே பட்ஜெட்டில் மதுரை - கன்னியாகுமரி பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இருவழிப் பாதை திட்டத்தை செயல்படுத்த 3 கட்டப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி என 159 கிமீ தொலைவுக்கு ஒரு திட்டம், மணியாச்சி - நெல்லை - நாகர்கோவில் என 102 கிமீ தொலைவுக்கு 2ம் திட்டம், கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை 87 கிமீ தொலைவுக்கு 3ம் திட்டம் என 3 கட்டங்களாக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இரட்டை ரயில்பாதை திட்டம் ஓரளவுக்கு நிறைவு பெற்றுவிட்டது. இந்நிலையில், தற்போது மணியாச்சி - நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தில் இரட்டை ரயில்பாதை பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் மதகநேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வரதன் அனந்தப்பன் நெல்லை - நாகர்கோவில் இரட்டை ரயில்பாதை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்கு ரயில்வேயிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதில் பல்வேறு புதிய தகவல்கள் கிட்டியுள்ளன. இது தொடர்பாக ரயில்வே அளித்துள்ள பதிலில், ‘‘வாஞ்சி மணியாச்சி - நெல்லை - நாகர்கோவில் இரட்டை ரயில்பாதை பணிகளானது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 102.19 கிமீ தூரத்திற்கு நடக்கிறது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 1.10.2017ம் தேதியாகும். இத்திட்டத்தின் கீழ் இப்போது 61.23 கிமீ தூரத்திற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அதாவது மொத்த பணிகளில் 73 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

நாங்குநேரியில் இருந்து மேலப்பாளையம் ரயில் நிலையம் வரை 24.49 கிமீ தூரம் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. நெல்லை - மேலப்பாளையம் இடையே 3.6 கிமீ பாதை பணிகள் வரும் 2023 ஜூலை மாதம் நிறைவுறும். ஆரல்வாய்மொழி முதல் நாகர்கோவில் வரை 12.87 கிமீ தூரத்திற்கு பணிகள் வரும் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவுறும். இத்திட்ட பணிகளை வரும் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை முடிக்க தேவையான 70.03 ஹெக்டேர் நிலத்தில் 7.86 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நிலம் கையகப்படுத்தி கொடுத்தால் திட்டம் குறித்த நேரத்தில் நிறைவு பெற்றுவிடும்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வரதன் அனந்தப்பன் கூறுகையில்:
நெல்லையில் இருந்து நாகர்கோவில் வரை இரட்டை ரயில்பாதை பணிகள் துரிதமாக முடிவுற்றால், பகல் நேரத்தில் கூடுதல் பாசஞ்சர் ரயில்கள் நமக்கு கிடைக்கும். அவற்றை பயன்படுத்தி நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரயில்களை நாம் பிடிக்க முடியும். மேலும் திருவனந்தபுரம் கோட்டத்தில் சில ரயில்களை நாம் நெல்லை வரை நீட்டிப்பு செய்யவும், இரட்டை ரயில்பாதை அவசியம் தேவையாகும். இத்திட்ட பணிகள் நிறைவுற்றால் தற்போது பயண நேரத்தில் 25 சதவீதம் குறையும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
எனவே நெல்லை - நாகர்கோவில் இரட்டை ரயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

கொரோனாவால் காலதாமதம்
சென்னை - கன்னியாகுமரி வழித்தடமானது தெற்கு ரயில்வேக்கு வருமானத்தை அள்ளித்தரும் வழித்தடமாகும். ஆனால் இவ்வழித்தடத்தில் 100 சதவீதத்திற்கும் மேல் போக்குவரத்து நெருக்கடியும் காணப்படுகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் என முக்கிய நகரங்களை இவ்வழித்தடம் இணைக்கிறது. சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 28 எக்ஸ்பிரஸ் ரயில்களும், பிற மாநிலங்களில் இருந்து சென்னை வழியாக 10க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ்களும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை - மதுரை இரட்டை ரயில்பாதை பணிகள் கடந்த 2018ம் ஆண்டே நிறைவு பெற்று விட்ட நிலையில், நெல்லை - நாகர்கோவில் ரயில்பாதை பணிகள் மட்டும் இன்னமும் இழுத்துக் கொண்டே போகிறது. நடப்பு 2022 மார்ச் மாதத்திற்குள் சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை பணிகளை முழுமையாக முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரட்டை ரயில்பாதை பணிகள் அடுத்தாண்டு வரை நீண்டுள்ளது.

Tags : Paddy - Nagargo , Nellai - Nagercoil, Double Track, Southern Railway Information
× RELATED நெல்லை -நாகர்கோவில் சாலையில் ஹைட்ரஜன்...