×

வடுவூர் ஏரியில் பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தில் குவிந்துள்ள உள்நாட்டு பறவைகள்: அரிவாள் மூக்கன், வெள்ளை கொக்கு, சாம்பல் நாரைகளை கண்டு ரசிக்கலாம்

மன்னார்குடி: வடுவூர் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயத்தில் உள்நாட்டு பறவைகளான அரிவாள் மூக்கன், வெள்ளை கொக்கு, சாம்பல் நாரைகள் குவிந்துள்ளன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவில் வடுவூர் ஏரி பிரமாண்டமாக அமைந்துள்ளது. இந்த ஏரியில் தமிழக வனத்துறை சார்பில் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. வடுவூர் ஏரியை சுற்றி வளமான ஈர நிலங்கள் அதிக அளவில் உள்ளது.

இதனால், எந்த நேரமும் இங்கு ரம்மியமான சூழல் நிலவும். இதன் காரணமாக பறவைகள் இங்கு ஆர்வத்துடன் இறங்கி ஏற வழிவகை செய்து விடுகிறது. மேலும் பறவைகளுக்கு தேவையான பல்வேறு உணவு வகைகளை இந்த ஏரி பூர்த்தி செய்கிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இருந்தும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறித்து பின்னர் மார்ச் மாதம் முதல் தங்களது நாடுகளுக்கு மீண்டும் பறந்து செல்லும்.

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான சீசன் துவங்கி உள்ள நிலையில் தற்போது அரிவாள் மூக்கன், வெள்ளை கொக்கு, சாம்பல் நாரைகள் போன்ற உள்நாட்டு பறவைகள் அதிகளவில் வந்து குவிந்துள்ளன. தொடர்கனமழை காரணமாக வெளி நாடுகளில் இருந்து பறவைகள் இந்த மாத  இறுதியில் வரத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் ஜெயச்சந்திரன் கூறுகையில்:
உலக வாழ் வலசை பறவைகளின் முகவரியாக வடுவூர் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் மாறி வருகிறது. சங்க இலக்கியங்களில் இடம் பிடித்த அன்றில் எனும் அரிவாள் மூக்கன்களின் ஆதிக்கம் நிறைந்த வடுவூர். இவை யாவும் ”ராம்சார் சைட்” எனப்படும் தொன்மை வாய்ந்த ஈர நிலங்களின் உலகப்புகழ் பட்டியலில் வடுவூர் பறவைகள் சரணாலயம் இடம் பிடிக்க வழிவகை செய்தது.ஏரியின் ஈர்ப்பில் இறங்கி வரும் பல வகையான வாத்துகள், சிறவிகள், அரிவாள் மூக்கன்கள், நாரைகள், கொக்குகள், உள்ளான்கள், நாமக்கோழிகள், நீர் காகங்கள் என அனைத்து வகையான பறவைகளுக்கும் அடைக்கலம் கொடுத்து உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது இந்த பிரம்மாண்ட வடுவூர்ஏரி.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது போல அயல் நாடுகளிலிருந்து வரும் பறவை இனங்களை அன் போடு வரவேற்று இடமளித்து பகிர்ந்துண்டு வாழும் பக்குவத்தை நமக்குணர்த்தும் உள்ளூர் வாழ் பறவைகளின் அதிசயத்தை வடுவூரில் காணலாம். அந்த இமயத்திலே அன்று சேரன் கொடி பறந்த வரலாறு நாம் அறிவோம். இன்று மத்திய ஆசியாவிலிருந்து இமயம் கடந்து வடுவூர் வந்தடையும் வரித்தலை வாத்துகளின் வரலாற்றையும் சற்று அறிந்து கொள்வோம்.

ஐரோப்பிய கண்டத்திலிருந்து வருகை தரும் சிறவிகளையும், வாத்துகளையும் வடுவூரிலே வரவேற்போம். ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து வருகை தரும் செண்டு வாத்துகளை கண்டு களிப்போம். அமெரிக்க கண்டத்திலிருந்து வருகை தரும் உள்ளான் வகைகளை உள்ளூரிலே வியந்து ரசிப்போம். வடுவூருக்கு தனிச்சிறப்பு சேர்க்கும் தையல் குருவிகளையும், தூக்கணாங்குருவிகளையும், மாங்குயிலின் மங்கல நிறத்தினை கண்டு மகிழ்வோம். நீர்ப்பறவைகள், நிலப்பறவைகளின் சங்கமமாக விளங்கும் ”வடுவூர் நம்ம ஊர்” என்பதில் பெருமிதம் கொள்வோம். சிறகால் உலகை இணைக்கும் உன்னத உயிரினமான பறவைகளை பாதுகாப்போம். பறவைகளை கண்டு ரசிப்போமேயன்றி உண்டு புசிக்க மாட்டோம் என உறுதி ஏற்போம் என்றார்.

Tags : Lake Vaduur , Vaduvur Lake, Protected Sanctuary, Indigenous Birds, Sickle-billed Crane, White Crane, Gray Stork
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...