×

ஊருக்குள் சென்று வரும் வாகனங்களால் அவதி: ஓசூரை சுற்றி 6 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்; போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு

ஓசூர்: ஊருக்குள் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில், ஓசூரை சுற்றிலும் 6 வழிச்சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கர்நாடக மாநிலத்துக்கு சென்று வரும் வாகனங்கள் புறநகர் வழியாக இயக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

இதனை ஏற்று, ஓசூரை சுற்றி 6 வழிச்சாலை அமைக்கும் பணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது. கேரளாவில் இருந்தும், கோவை மற்றும் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஓசூர் வழியாக வடமாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், ஓசூர் மற்றும் பெங்களூருவில் காலை- மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி, ஓசூர் நகருக்குள் அனுமதிக்காமல் சூளகிரி, பேரிகை வழியாக மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கின்றனர். அப்படி இருந்தும் கார் போன்ற இலகு ரக வாகனங்கள் ஓசூர் வழியாக வடமாநிலங்களுக்கு செல்கின்றன. இதனால், பாகலூர் சாலை, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

 இதனைத் தவிர்க்க, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை, கிருஷ்ணகிரி அருகே உள்ள சூளகிரியை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே 2 சாலைகளாக பிரித்து மைசூருக்கு செல்ல தெற்கே 6 வழிச்சாலை, கர்நாடக மாநில விமான நிலையம் மற்றும் வட மாநிலங்களுக்குச் செல்ல வடக்கே மற்றொரு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

ஓசூர் அருகே கெலமங்கலம் சாலையில் உள்ள பைரமங்கலம், குந்துமாரனப்பள்ளியில் 6 வழிச்சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை கொண்டு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் 95 கி.மீ., தொலைவிற்கும், ஓசூர் பகுதியில் 45 கி.மீ., தொலைவிற்கும் அமைக்கப்படும் இந்த சாலையானது, கர்நாடக மாநிலத்தில் முடியும் தறுவாயில் உள்ளது.இந்த சாலை பணி முடிவடைந்தால், கனரக வாகனங்கள் ஓசூருக்குள் வருவது பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.

வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ஓசூருக்குள் வராமல், பாகலூர் வழியாக கர்நாடக மாநிலம் சென்றடைந்து விடும். இந்த 6 வழிச்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம், கலுகொண்டப்பள்ளி அருகே தளி சாலையையும், மதகொண்டப்பள்ளி அருகே தேன்கனிக்கோட்டை சாலையையும், குந்துமாரணப்பள்ளி அருகே கெலமங்கலம் சாலையையும், பேரண்டப்பள்ளி அருகே சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், பெரிய பாலமும், பாகலூர் அருகே பாகலூர் சாலையையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த 5 சாலைகளும் ஓசூரின் பிரதான இணைப்பு சாலைகளாகும்.இதுகுறித்து ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், ‘ஓசூரைச் சுற்றி 6 வழிச்சாலை அமைப்பதன் மூலம் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்,’ என்றார்.

Tags : Osur , Vehicular traffic, construction of 6-lane road, traffic congestion,
× RELATED ஒசூர், கிருஷ்ணகிரியில் 4...